வேறு வழியில்லாமல் பெற்ற மகனை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை நாடகம்.. சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்..!
மதுபோதைக்கு அடிமையான மகனை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
tenkasi
தென்காசி மாவட்டம் குற்றாலம் அடுத்துள்ள வல்லம் கிறிஸ்டியன் காலனி 4வது தெருவைச் சோ்ந்தவா் முகைதீன் அப்துல்காதா். இவருடைய மனைவி அலி பாத்திமா. இவர்களுக்கு முகம்மது சித்திக் (25) என்ற மகன் உள்ளார். வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 5ம் தேதி மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக குற்றாலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முகம்மது சித்திக் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, சித்திக்கின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தில் காயம் இருந்தாக தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து தாயிடம் விசாரணை நடத்தியது போது முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். பின்னர் கிடுக்கப்பிடி விசாரணை நடத்தியதில் முகமது சித்திக் வேலைக்கு எதுவும் சொல்லாமல் போதைக்கு அடிமையாகி குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உறவினர்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
பலமுறை பெற்றோர் கண்டித்தும் பேச்சை கேடகவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சித்திக்கின் தந்தை அப்துல்காதா்(51) தாய் செய்யது அலி பாத்திமா (39) பாத்திமாவின் சகோதரர் மற்றும் திவான்ஒலி (39) ஆகியோர் ஒன்று சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.