பிரதமர் மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து இத்தனை திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதா? முழு லிஸ்ட் இதோ
பிரதமர் மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்
Movies based on Narendra Modi
பிரதமர் மோடி செப்டம்பர் 17ந் தேதி தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தற்போதே களைகட்டி உள்ளன. மோடியின் பிறந்தநாளன்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த பாஜகவினர் திட்டமிட்டு உள்ளனர். இந்த நிலையில், பிரதமர் மோடியை மையமாக வைத்து உருவான திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
பிஎம் நரேந்திர மோடி (PM Narendra Modi)
பிரதமர் மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பயோபிக் திரைப்படம் தான் பிஎம் நரேந்திர மோடி. இதில் மோடியின் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்திருந்தார். ஓமங் குமார் இயக்கிய இத்திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்தது. மோடி டீ விற்பவராக இருந்து பின்னர் கஷ்டப்பட்டு முன்னேறி எப்படி நாட்டின் பிரதமர் ஆனார் என்கிற சாதனை பயணத்தை இப்படம் விளக்கி இருந்தது.
மன் பைரகி (Mann Bairagi)
பிரதமர் மோடியின் வாழ்க்கையில் நடந்த பலருக்கும் தெரிந்திடாத சில சுவாரஸ்ய நிகழ்வுகளை மையமாக வைத்து மன் பைரகி என்கிற படத்தை கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கினர். சஞ்சய் லீலா பன்சாலி தயாரித்த இப்படத்தை சஞ்சய் திரிபாதி இயக்கி இருந்தார். மோடியில் இளமை காலத்தை விளக்கும் விதமாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டாலும் இன்னும் திரைக்கு வரவில்லை.
இதையும் படியுங்கள்... பல நாட்டு தலைவர்களை உள்ளடக்கிய சர்வே.. தொடர்நது முதலிடத்தில் இந்திய பிரதமர் மோடி - முழு விவரம் இதோ!
மோடி ஜர்னி ஆஃப் காமன் மேன் (வெப் தொடர்) - Modi A Journey of a Common Man
மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து கிஷோர் மக்வானா எழுதிய காமன் மேன்ஸ் பிஎம் என்கிற புத்தகத்தை தழுவி உருவாக்கப்பட்ட வெப் தொடர் தான் மோடி தி ஜர்னி ஆஃப் காமன் மேன். உமேஷ் சுக்லா இயக்கிய இந்த வெப் தொடர் 10 எபிசோடுகளாக வெளியிடப்பட்டது. இதில் மோடியின் கதாபாத்திரத்தில் ஆஷிஷ் ஷர்மா நடித்திருந்தார்.
நமோ சவுனே கமோ (Namo Saune Gamo)
குஜராத்தி படமான இது கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் ரிலீஸ் ஆனது. இந்த படம் ஒரே ஒரு காட்சி மட்டும் தியேட்டரில் ஓடிய நிலையில் தேர்தல் ஆணையத்தில் உத்தரவின் பேரில் அதிரடியாக திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது. இதில் மோடியை மையமாக வைத்து எடுக்கவில்லை என படக்குழுவினர் தரப்பில் முறையிட்டாலும், அப்படத்தில் மோடியை சித்தரிக்கும் வகையில் கதாபாத்திரம் இடம்பெற்றிருந்ததன் காரணமாக அப்படத்தை ரிலீஸ் செய்ய தடை விதித்தனர்.
மோடி ககா கா கவுன் (Modi Kaka Ka Gaon)
குஜராத் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி கடந்த 2017-ம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் தான் மோடி ககா கா கவுன். முதலில் இப்படத்தை தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக அதாவது 2017-ம் ஆண்டு டிசம்பர் 8-ந் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் சென்சாரில் மன் கீ பாத் என்கிற வார்த்தையை மியூட் செய்ய சொல்ல, அதற்கு படக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பின்னர் மோடியிடம் தடையில்லா சான்று வாங்கி அதே மாதம் 28-ந் தேதி வெளியிட்டனர்.
இதையும் படியுங்கள்... டீ கடை டூ செங்கோட்டை: பிரதமர் மோடி அரசியல் பயணம்!