ஓபிஎஸ் அணியை சேர்ந்த முக்கிய நிர்வாகியை தட்டித்தூக்கிய இபிஎஸ்.. மாஸ் காட்டும் அன்வர் ராஜா.!
ஓபிஎஸ் அணியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒற்றை தலைமை விவகாரத்தை அடுத்து ஓபிஎஸ், இபிஎஸ் உச்சக்கட்ட மோதலை அடுத்து இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வந்தனர். கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனால், இந்த வழக்கு விசாரணையில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ், டிடிவி.தினகரன், பாஜக இணைந்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ஓபிஎஸ் மற்றும் டிடிவி.தினகரன் அணி நிர்வாகிகளை தட்டித்தூக்கும் வேலையில் எடப்பாடி பழனிசாமி இறங்கியுள்ளார்.
அதன்படி ஓபிஎஸ் அணியிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட துணைச் செயலாளர் அங்குசாமி, ராமநாதபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் கோட்டைசாமி ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்து ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்தனர். இவர்கள் இருவரையும் எடப்பாடி பழனிசாமி பக்கம் கொண்டு வருவதற்கு மாஜி எம்.பி. அன்வர் ராஜா முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பித்தக்கது.
இதனிடையே வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இன்னும் சில ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் அமமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கம் வருவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.