யாருக்கு சார் வரும் இந்த மனசு.. அரசு கொடுத்த ரூ.25 லட்சத்தை தான் படித்த கல்லூரிகளுக்கு கொடுத்த வீர முத்துவேல்!
தமிழ்நாடு அரசு வழங்கிய ரூ.25 லட்சம் ஊத்தக்தொகையை தான் படித்த 4 கல்லூரிகளுக்குப் இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் நன்கொடையாக வழங்கினார்.
உலகமே இந்தியாவை திரும்பி பார்க்கும் அளவுக்கு சந்திரயான் - 3 திட்டம் வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய பங்காற்றியவர் தமிழ்நாட்டை சேர்ந்த வீர முத்துவேல். தன்னுடைய தங்கை திருமணத்திற்கு கூட செல்லாமல் சந்திரயான் - 3 பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், இஸ்ரோவில் பணியாற்றிய முக்கிய விஞ்ஞானிகளை கௌரவிக்கும் விதமாக கடந்த மாதம் 2ம் தேதி தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், தமிழக உயர்கல்வித் துறை சார்பில் ‘ஒளிரும் தமிழ்நாடு- மிளிரும் தமிழர்கள்’ என்ற பெயரில், அந்த பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை, சிவன், வனிதா, வீரமுத்துவேல் உள்ளிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் 9 பேரை பாராட்டி தலா 25 லட்ச ரூபாய் வீதம் பரிசுத் தொகை தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது.
இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்ட ரூ.25 லட்சம் பரிசு தொகையை தான் படித்த கல்லூரிகளுக்கு வழங்கியுள்ளார். அதன்படி தான் படித்த விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக், தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரி, திருச்சி என்.ஐ.டி., சென்னை ஐ.ஐ.டி. உள்ளிட்ட நான்கு கல்வி நிறுவனங்களுக்கு அவற்றை நன்கொடையாக வழங்கியுள்ளார். தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேலின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.