உஷார் மக்களே... அமலா ஷாஜியை நம்பி நடுத்தெருவுக்கு வந்த பாலோவர் - இன்ஸ்டாவில் இப்படி ஒரு நூதன மோசடி நடக்குதா?
இன்ஸ்டாகிராமில் 40 லட்சம் பாலோவர்களைக் கொண்ட அமலா ஷாஜியின் பேச்சைக் கேட்டு பாலோவர் ஒருவர் ரூ.1 லட்சத்துக்கு மேல் இழந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Amala Shaji
சினிமா பாடல்களுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு பிரபலமானவர் அமலா ஷாஜி. படத்தில் உள்ள நடிகைகள் போல் உடையணிந்து அப்படியே ரீக்கிரியேட் செய்து ரீல்ஸ் போடுவது தான் அமலா ஷாஜியின் ஸ்பெஷல். அவரின் இந்த முயற்சிக்கு கிடைத்த பரிசு தான் 4 மில்லியன் பாலோவர்கள். ஆரம்பத்தில் பாலோவர்களை ஈர்ப்பதற்காக வீடியோ வெளியிடும் இன்ஸ்டா பிரபலங்கள் ஒருக்கட்டத்துக்கு மேல் தங்கள் பாலோவர்களை காட்டியே பணம் சம்பாதிக்க தொடங்கி விடுவார்கள்.
அப்படி தான் அமலா ஷாஜியும் தன்னிடம் உள்ள 4 மில்லியன் பாலோவர்களை காட்டி இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் கூட அமலா ஷாஜி தங்கள் படத்தை பற்றி 30 செகண்ட் வீடியோ வெளியிட ரூ.2 லட்சம் கேட்பதாக தன் மனக்குமுறல்களை கொட்டினார். இப்படி சர்ச்சைக்குரிய இன்ஸ்டா பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கும் அமலா ஷாஜி தற்போது நூதன மோசடிக்கு வழிவகுத்துள்ளார்.
Amala Shaji Trading Scam
அமலா ஷாஜி டிரேடிங் கம்பேனி ஒன்றை புரமோஷன் செய்து வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் வீட்டில் இருந்தபடியே 20 முதல் 30 ஆயிரம் வரை சம்பாதிக்க வேண்டுமா என்னுடைய தோழி அனன்யா போரெக்ஸுக்கு மெசேஜ் அனுப்புங்கள். அவரிடம் நான் முதலீடு செய்து நிறைய லாபம் ஈட்டினேன். அது 100 சதவீதம் நம்பகத்தன்மை கொண்ட டிரேடிங் கம்பேனி என்பதால் உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன் என பேசி இருந்தார்.
அமலா ஷாஜியின் இந்த வீடியோவை பார்த்த அவரது பாலோவர் ஒருவர் இது நிஜமா என சோதனை செய்து பார்க்க முதலில் ஆயிரம் ரூபாயை அனுப்பி இருக்கிறார். அவர் முதலீடு செய்த ஆயிரம் ரூபாய் அடுத்த சில நிமிடங்களில் 12 ஆயிரத்து 999 ரூபாயாக மாறிவிட்டது எனக்கூறி வாழ்த்தி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் அனன்யா. பின்னர் அந்த பணத்தை எடுக்க வேண்டும் என்றால் 8 ஆயிரத்து 999 ரூபாய் செக்யூரிட்டி டெபாசிட் ஆக அனுப்ப வேண்டும் என அனன்யா கூற, அமலா ஷாஜியின் பாலோவரும் அதை அனுப்பி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... பொங்கல் விருந்தாக தியேட்டர் மற்றும் ஓடிடியில் இத்தனை தமிழ் படங்கள் ரிலீஸா? என்ன லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது
Amala Shaji Instagram Scam
பின்னர் பணத்தை பெற்றதும் சிரிய டெக்னிக்கல் பிழை நடந்துவிட்டதாக கூறிய அனன்யா, உங்களுடைய தொகை தற்போது ஒரு லட்சத்தை கடந்துவிட்டதாகவும், அதை எடுக்க நீங்கள் 18 ஆயிரத்து 999 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என சொல்ல, அந்த நபரும் ஒரு லட்சத்துக்கு ஆசைப்பட்டு அனன்யா கேட்ட பணத்தை அனுப்பி இருக்கிறார். பின்னர் இதற்கான ஜிஎஸ்டி தொகையாக ரூ.31 ஆயிரம் செலுத்த வேண்டும் என நோட்டிபிகேஷன் வந்திருக்கிறது.
இப்படி அனன்யா கேட்க கேட்க பணம் அனுப்பிய அந்த நபர் ஒரு கட்டத்தில் தன் பணத்தை திருப்பி தருமாறு கேட்க, அதற்கு அனன்யா தரப்பில் இருந்து மாதக்கணக்கில் எந்த ஒரு ரிப்ளையும் வரவில்லையாம். பின்னர் கராராக பணத்தை அவர் திருப்பி கேட்டதும் நைசாக அந்த இன்ஸ்டா பக்கத்தை குளோஸ் செய்துவிட்டு சிட்டாக பறந்துவிட்டார் அனன்யா. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த நபர் அமலா ஷாஜியை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டுள்ளார்.
Amala Shaji Reply
இதற்கு எந்தவித ரிப்ளையும் செய்யாமல் அமலா ஷாஜி மெளனம் காத்து வந்ததால், சமூக வலைதளத்தில் இப்படி ஒரு மோசடி நடப்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார் அந்த நபர். இதனால் வேறுவழியின்றி விளக்கம் அளித்த அமலா ஷாஜி, தன்னுடைய விளம்பரங்களில் சொல்லும் கருத்துகளுக்கு நான் பொறுப்பல்ல. அதன் உண்மைதன்மையை விசாரித்து சொந்த அபாயத்துக்கு உட்பட்டு நீங்கள் முதலீடுகளை செய்யுங்கள் என்று திமிரான ஒரு பதிலை கொடுத்திருக்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அமலா ஷாஜியின் பாலோவர்கள் அவருக்கு எதிராக சோசியல் மீடியாவில் குரல் எழுப்பி வருகின்றனர். அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த விவகாரம் குறித்து பேசி உள்ள முன்னாள் டிஜிபி ரவி, இதில் அமலா ஷாஜியும் ஒரு விக்டிம் தான் என்பதால் அவர்மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பில்லை என கூறி இருக்கிறார். அதோடு இதுபோன்ற சைபர் கிரைம் கும்பலிடம் இருந்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
இதையும் படியுங்கள்... வத்திக்குச்சி வனிதா பொண்ணுனா சும்மாவா! கொளுத்திப்போட்ட ஜோவிகா... பிக்பாஸ் வீட்டில் மீண்டும் வெடிக்கும் மோதல்?