ஓயாமல் டார்ச்சர்.. வீடு புகுந்து மருமகளை கதறவிட்ட 85 வயது மாமனார்.. நடந்தது என்ன?
உதவி கல்வித்துறை அலுவலராக இருந்து ஓய்வு பெற்ற 85 வயது மாமனார் தனது மருமகளை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல்(85). உதவி கல்வித்துறை அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெயராணி. இவர்களுக்கு ராஜேஷ் கண்ணன், ஜெகதீஸ் கண்ணன் என்ற இருமகன்கள் உள்ளனர். இருவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், மூத்த மகன் ராஜேஷ் கண்ணனின் மனைவி பிரேமா(40) மாமனாரிடம் அடிக்கடி சொத்து கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இதேபோல் நேற்று முன்தினம் மீண்டும் மருமகள் பிரேமா மாமனார் சண்முகவேலிடம் சொத்து கேட்டு பிரச்சனை செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாமனார் சண்முகவேல் வீடு புகுந்து மருமகள் பிரேமாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த மருமகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து சொத்து பிரச்சனையில் மருமகளை கொலை செய்ததாக மாமனார் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரேமா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாமனாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருமகளை மாமனார் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.