வெளி நாட்டில் வேலை, லட்சங்களில் சம்பளம்; பல இளைஞர்களுக்கு வலை விரித்து மோசடி - கோவையில் பரபரப்பு
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பல இடங்களில் லட்சகணக்கில் மோசடி செய்த மூவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை போத்தனூர் சங்கமம் நகர் பகுதியைச் சேர்ந்த முஹம்மத் அலி என்பவரின் மகன் முஹம்மது ஆஷிக்(வயது 30). இவர் போத்தனூர் பகுதியில் வெளிநாட்டிற்கு மாணவர்களை படிப்பதற்கு அனுப்பும் கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரியைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் மதுரையைச் சேர்ந்த டோமினிக் ஆகியோர் இவரிடம் அறிமுகம் ஆகியுள்ளனர்.
அவர்கள் தங்களுக்கு தெரிந்த கயானா நாட்டில் வசித்து வரும் இலங்கை தமிழர் பாபு ஜெனிபர் என்பவர் இருப்பதாகவும் அவர் மூலம் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுத் தர முடியும் என கூறியிருக்கின்றனர். அந்த சமயத்தில் முகமது ஆசிக் நிறுவனத்திற்கு மாதேஷ், பிரசாந்த், அஜித்குமார், கரிகாலன் உள்ளிட்டோர் வெளிநாட்டு வேலை கேட்டு தொடர்பு கொண்டு உளளனர். அவர்களிடம் வினோத் குமாரும் டோமினிக்கும் பேசியுள்ளனர்.
பகலில் போலீஸ் வேலை, இரவில் திருட்டு; கரூரில் பைக் திருடிய ஊர்காவல் படை வீரர் கைது
தொடர்ந்து அவர்களிடம் இருந்து 15 லட்சத்து 8 ஆயிரத்து 950 ரூபாயை வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பெற்றுள்ளனர். பணத்தைப் பெற்று பல மாதங்களாகியும் அவர்கள் வேலை எதையும் ஏற்பாடு செய்து தரவில்லை என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பணம் கொடுத்த நபர்கள் முகமது ஆசிக்கிடம் தங்களது பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர். உடனே முகமது ஆசிக் பணத்தை வாங்கிய வினோத்குமார் மற்றும் டோமினிக்கிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
அவர்கள் சில மாதங்களில் தந்து விடுவதாக கூறியிருக்கின்றனர். இதை நம்பிய முகமது ஆசிக் வெளிநாட்டு வேலைக்காக பணம் கொடுத்தவர்களுக்கு தனது சொந்த பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளார். ஆனால் அதன் பின்பு வினோத் குமாரும், டோமினிக்கும் 3 லட்சம் ரூபாய் மட்டுமே முகமது ஆசிக்கிற்கு கொடுத்துள்ளனர். மீதமுள்ள பணத்தை தராமல் பல மாதங்களாக ஏமாற்றி வந்துள்ளனர். இதை தொடர்ந்து முகமது ஆஷிக் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
என்னடா லைட் அடிச்சி பாத்துட்டு திருடுறீங்க? கொள்ளை கும்பலால் கரூர் மக்கள் பீதி
புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் 12 லட்சத்து 8 ஆயிரத்து 950 ரூபாயை தராமல் மோசடி செய்த கிருஷ்ணகிரியை சேர்ந்தவரும், கோவை வடவள்ளி திருவள்ளுவர் நகரில் வசித்து வரும் வாசுதேவன் என்பவரின் மகன் வினோத்குமார், மதுரை கூடல் நகரை சேர்ந்த அன்னமராஜா என்பவரின் மகன் டோமினிக், கயானா நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர் பாபு ஜெனிபர் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர.
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வினோத்குமார், டோமினிக் ஆகியோர் மீது தமிழகம் முழுவதும் குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோரிடம் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக பல புகார்கள் உள்ளன. மேலும் வினோத் குமார், டோமினிக் உள்ளிட்டோர் வெளிநாட்டில் உள்ள தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏராளமான இளைஞர்களை ஏமாற்றியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.