கண்டுகொள்ளாத கட்சிகள்.. வேறு வழியில்லாமல் ஜெயலலிதா பாணியில் 40 தொகுதியிலும் தனித்து களமிறங்கும் அதிமுக?
அதிமுக கூட்டணி இணைய எந்த கட்சிகளும் முன்வராத நிலையில் ஜெயலலிதா பாணியில் 40 தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Parliament Election
2024 நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட்ட உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டை பொறுத்த வரையில் திமுக, அதிமுக பிரதான கட்சிகளாக உள்ளன. திமுக பொறுத்த வரையில் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதோ அதே கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இதனால், திமுக தலைமை கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
AIADMK
அதே நேரத்தில் பாஜக கூட்டணி அமைத்து கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை சந்தித்த அதிமுக திடீரென அக்கூட்டணியில் இருந்து விலகுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தது. பாஜகவை கழற்றிவிட்டதால், பல கட்சிகள் தங்கள் தலைமையிலான கூட்டணிக்கு வருவார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் எதிர்பார்த்து காத்திருந்தார்.
Anbumani
ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதிமுக தங்களது கூட்டணியில் எந்த கட்சி வரும் என தெரியாமல் உள்ளது. தற்போது வரை எஸ்டிபிஐ மற்றும் புரட்சி பாரதம் கட்சிகள் மட்டுமே உள்ளன. ஆனால், பெரிய கட்சிகளாக பார்க்கப்பட்ட பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பாஜகவுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதால் அந்த கூட்டணிக்கே செல்ல அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Edappadi Palanisamy
குறிப்பாக விஜயகாந்த் மறைவுக்கு பிறகு தேமுதிகவுடன் பாஜக மிக நெருக்கம் காட்டி வருகிறது. அதேபோல் புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளும் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த இதுவரை முன்வரவில்லை. ஆகையால் எஸ்டிபிஐ மற்றும் புரட்சி பாரதம் கட்சிகளை இரட்டை இலை சின்னத்தில் நிற்க வைத்து 40 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளது.