அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகனை கொலை செய்தது இதற்காக தான்! கைதானவர்கள் பகீர் வாக்குமூலம்.!
முன்னாள் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன் கொலை வழக்கு தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்கள் போலீசில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
Chengalpattu
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் ரவி. முன்னாள் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர். இவரது மனைவி கல்யாணி. இவர் தற்போது ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார். இவரது 2வது மகன் அன்பரசு (34). 9வது வார்டு கவுன்சிலராகவும் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக இளைஞர் பாசறை செயலாளராகவும் இருந்தார்.
இந்நிலையில், அன்பரசு கடந்த 21ம் தேதி இரவு கீரப்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காரில் நண்பர்களுடன் வந்து கொண்டிருந்தார். கீரப்பாக்கம் சுடுகாடு அருகே காரை நிறுத்திவிட்டு அன்பரசு நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் கார் மீது இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.
இதில், கார் கண்ணாடி உடைந்தது. இதனையடுத்து, அன்பரசு மற்றும் அவரது நண்பர்கள் அலறிய படி சிதறி ஓடினர். ஆனால், அந்த கும்பல் அன்பரசை மட்டும் விடாமல் ஓட ஒட விரட்டி கை, கால்கள், முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அன்பரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிவந்தனர். இதனிடையே, இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் மாமல்லபுரம் டி.எஸ்.பி அலுவலகத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
பின்னர், சுனில் (எ) சுதர்சன் (20), பாலாஜி (20), கீரப்பாக்கம் துலுக்காணத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (21), நெடுங்குன்றம் சிவன் கோயில் தெருவை சேர்ந்த ரத்தினம் என்ற நெடுங்குன்றம் ரத்தினம் (26) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். கடந்த ஆண்டு நல்லம்பாக்கத்தைச் சேர்ந்த தேவகுமார் என்பவரை இந்த கும்பல் கொலை செய்துள்ளது. இதற்கு பழிக்கு பழி வாங்க தேவகுமாரின் நண்பரான வேங்கடமங்கலத்தை சேர்ந்த விஜய் (எ) பிஸ்டல் விஜய் திட்டமிட்ட வந்ததாகவும் இதற்கு பல்வேறு வகைகளில் அன்பரசு உதவி செய்து வந்ததன் காரணமாக கொலை செய்தது தெரியவந்தது. கைதான 4 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக சிலரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.