Siddharth and Aditi Rao Engaged: அதிதி ராவுடன் திருமணம் நடக்கவில்லை! நிச்சயதார்த்தத்தை உறுதி செய்த சித்தார்த்!
நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் திருமணம் நேற்று ரகசியமாக நடந்து முடிந்ததாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவிய நிலையில், இதை தெளிவு படுத்தும் விதமாக நடிகர் சித்தார்த், தங்களின் நிச்சயதார்த்தத்தை உறுதி செய்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் மிகவும் திறமையான நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறியப்படுபவர் சித்தார்த். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' படத்தின் மூலம் 2003-ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமான சித்தார்த், நடிக்க துவங்கியதும் தன்னுடைய நீண்ட நாள் காதலியான மேக்னா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சித்தார்த் - மேக்னா ஜோடிக்கு ஒரு மகள் பிறந்த நிலையில், 4 வருடத்திலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதை தொடர்ந்து தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வந்த சித்தார்த், அடிக்கடி தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் காதல் சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இதுவரை, ஸ்ருதிஹாசன், மற்றும் சமந்தா ஆகியோரை காதலித்து பிரேக் அப் செய்துள்ள சித்தார்த் தன்னுடைய 40 வயதுக்கு பின்னர், ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நடிகை அதிதி ராவை காதலித்து வருவதாக கடந்த இரண்டு வருடங்களாகவே கிசுகிசுக்கப்பட்டு வந்தது. மும்பையில் இருவரும் ஜோடியாக வலம் வருவது மட்டும் இன்றி, பிரபலங்களின் திருமணம், அவார்டு நிகழ்ச்சிகளுக்கும் ஜோடியாக ஆஜராகி காதலை உறுதி செய்தனர்.
மேலும் லிவிங் ரிலேஷன் ஷிப்பில் வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து கேள்வி எழுப்பினால்... தொடர்ந்து இருவருமே தவிர்த்து வந்த நிலையில், நேற்று அதிதி ராவ் மற்றும் சித்தார்த் இருவருக்கும், தெலங்கானாவில் உள்ள வனபர்த்தியில் திருமணம் நடைபெற்றதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் இவர்களின் திருமணம் குறித்து ஒரு புகைப்படம் கூட வெளியாகாத நிலையில், அந்த அளவிற்கு இந்த தகவல் உண்மை என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
ஆனால் தற்போது இதற்க்கு விளக்கம் கொடுக்கும் விதமாக சித்தார்த் அதிதி ராவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுளளார். அதில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதை உறுதி செய்துள்ளனர். இதன் மூலம் இன்னும் இவர்களுக்கு திருமணம் ஆக வில்லை என்பது தெளிவாகியுள்ளது. விரைவில் திருமணம் குறித்த அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.