ஓ! இதுக்கு பேர்தான் காதலுக்கு வயசு இல்லையா! 54 வயது தொழிலாளியை காதலித்து திருமணம் செய்து கொண்ட 24 வயது ஆசிரியை
24 வயது பட்டதாரி பெண் 54 வயது கூலி தொழிலாளியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே மாட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(54). விசைத்தறி தொழிலாளி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளான மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த முதுகலை பட்டம் மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்த விமலா (24) கிருஷ்ணன் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. நமது காதலுக்கு இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்தனர்.
அதன்படி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து தாலிகட்டி திருமணம் செய்து கொண்டார். இதை சற்றும் எதிர்பாராத விமலாவின் தந்தை அதிர்ச்சியடைந்தார். தனது மகளை கிருஷ்ணன் கடத்தி சென்றுவிட்டதாக தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து இருவரையும் போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இதனை அறிந்த விமலா - கிருஷ்ணன் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
தகவலறிந்து காவல் நிலையத்திற்கு வந்த பெண்ணின் உறவினர்கள் பட்டம் படித்த பெண்ணான நீ தந்தை வயதுள்ளவரை திருமணம் செய்யலாமா? என்று கேட்டு அறிவுரைகளை வழங்கினர். ஆனாலும் விமலா காதல் கணவர் கிருஷ்ணனுடன் தான் செல்வேன் என திட்டவட்டமாக கூறிவிட்டார். அவரது விருப்பப்படி கணவர் கிருஷ்ணனுடன் விமலாவை காவல்துறையினரும் அனுப்பி வைத்தனர்.