- Home
- டெக்னாலஜி
- சாதனங்கள்
- ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்: போனுக்கும் லேப்டாப்பிற்கும் சேர்த்து 9000mAh பேட்டரியுடன் ஒரே ஒரு பவர் பேங்க் போதும்!
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்: போனுக்கும் லேப்டாப்பிற்கும் சேர்த்து 9000mAh பேட்டரியுடன் ஒரே ஒரு பவர் பேங்க் போதும்!
ஜப்பானைச் சேர்ந்த 'சி.ஐ.ஓ' (CIO) நிறுவனம், சார்ஜிங் கேபிளைத் தனியாக எடுத்துச் செல்லும் சிரமத்தைத் தவிர்க்க 'ஸ்மார்ட்கோபி எக்ஸ்06' (Smartcoby Ex06) என்ற புதிய 9,000 mAh பவர் பேங்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட்கோபி எக்ஸ்06 பவர் பேங்க்
பவர் பேங்க்கள் நமது அன்றாட பயன்பாட்டிற்கு மிகவும் பயனுள்ள சாதனங்களாகும். இருப்பினும், அவற்றை எடுக்கும்போது அதற்கான சார்ஜிங் கேபிளையும் மறக்காமல் எடுத்துச் செல்வது பலருக்கும் ஒரு சவாலாகவே இருந்து வருகிறது. ஜப்பானைச் சேர்ந்த பிரபல டிஜிட்டல் சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான 'சிஐஓ' (CIO), இந்த சிக்கலுக்கு தீர்வாக ஸ்மார்ட்கோபி எக்ஸ்06 (Smartcoby Ex06) எனும் புதிய 9,000 எம்ஏஎச் (mAh) பவர் பேங்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 'கியூஐ2.2' (Qi2.2) வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன், உள்ளமைக்கப்பட்ட 30 செ.மீ சுருட்டி வைக்கும் வசதி கொண்ட யுஎஸ்பி-சி கேபிளும் வழங்கப்பட்டுள்ளது.
நவ.9 அன்று 'மகுவாக்கே' (Makuake) தளத்தில் இந்த சாதனத்தை சிஐஓ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இந்நிறுவனத்தின் அறிவிப்பின்படி, இந்த ஸ்மார்ட்கோபி எக்ஸ்06 சாதனம் வயர்லெஸ் முறையில் 25 வாட்ஸ் (25 W) வரையிலான மின்சாரத்தையும், இதில் உள்ள கேபிள் வழியாக 45 வாட்ஸ் (45 W) வரையிலான வேகமான சார்ஜிங்கையும் வழங்குகிறது. இதன் மூலம் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, யுஎஸ்பி-சி ஆதரவு கொண்ட சில லேப்டாப்புகளையும் எளிதாக சார்ஜ் செய்ய முடியும்.
ஸ்மார்ட்கோபி எக்ஸ்06 சிறப்பம்சங்கள்
இதில் வழங்கப்பட்டுள்ள கேபிள் இருவழிப் பயன்பாட்டைக் கொண்டது. இதன் மூலம் பிற சாதனங்களை சார்ஜ் செய்ய முடிவதோடு, பவர் பேங்க்-ஐயும் சார்ஜ் செய்து கொள்ள முடியும். வீட்டிலிருக்கும் போது, இந்த கேபிளை யுஎஸ்பி-சி சார்ஜருடன் இணைத்தால், பவர் பேங்க் ஒரே நேரத்தில் வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டாண்டாகவும் செயல்படும். அதாவது, பவர் பேங்க் தானும் சார்ஜ் ஆகிக்கொண்டே, அதன் மேல் வைக்கப்படும் ஸ்மார்ட்போனுக்கும் வயர்லெஸ் முறையில் சார்ஜ் ஏற்றும். இது பயனர்களின் நேரத்தை கணிசமாக சேமிக்கிறது.
25W வயர்லெஸ் சார்ஜிங் பவர் பேங்க்
மேலும், இந்த சாதனத்தில் 'நவா கோர் சி3' (NovaCore C3) எனும் சிறப்பு மேலாண்மை அமைப்பை சிஐஓ நிறுவனம் பொருத்தியுள்ளது. இதற்கான மொபைல் ஆப்பை (App) பயன்படுத்துவதன் மூலம், வழக்கமான எல்இடி (LED) விளக்குகளைக் காட்டிலும் துல்லியமாக, பவர் பேங்கின் பேட்டரி ஆரோக்கியம், சார்ஜிங் சுழற்சிகள் மற்றும் வெப்பநிலை போன்ற பல்வேறு விவரங்களை விரிவாக அறிந்துகொள்ள முடியும்.
இருப்பினும் இதில் ஒரு சிறிய வரம்பும் உள்ளது. இந்த பவர் பேங்கில் ஒரே நேரத்தில் ஒயரிடு (Wired) மற்றும் வயர்லெஸ் (Wireless) ஆகிய 2 முறைகளிலும் சார்ஜ் செய்ய முடியும் என்றாலும், அவ்விரு முறைகளும் சேர்ந்து இயங்கும்போது இதன் மொத்த வெளியீட்டு திறன் 15 வாட்ஸ் (15 W) ஆகக் குறைந்துவிடும். எனவே, ஒரே நேரத்தில் 2 சாதனங்களை அதிவேகத்தில் சார்ஜ் செய்ய விரும்புபவர்கள் தங்களின் எதிர்பார்ப்பைக் சற்றே குறைத்துக்கொள்ள வேண்டும்.
விலை விவரங்கள்
தற்போது சிஐஓ ஸ்மார்ட்கோபி எக்ஸ்06 சாதனம் 'மகுவாக்கே' நிதிதிரட்டல் (Crowdfunding) பிரச்சாரம் மூலம் விற்பனைக்குக் கிடைக்கிறது.
முதல் 300 பேருக்கான சலுகை விலை - ரூ.4,700
அடுத்த 500 பேருக்கான சலுகை விலை - ரூ.4,800)
வழக்கமான சில்லறை விற்பனை விலை (Retail Price) - ரூ.6,550)
சர்வதேச சந்தைகளில் மற்றும் இந்திய சந்தையில் இந்த தயாரிப்பு எப்போது விற்பனைக்கு வரும் என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.













