- Home
- பொழுதுபோக்கு
- Jailer 2: ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து.. இளைஞர் பலி.. என்ன நடந்தது? பரபரப்பு தகவல்!
Jailer 2: ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து.. இளைஞர் பலி.. என்ன நடந்தது? பரபரப்பு தகவல்!
Jailer 2: 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் இளைஞர் பலியானார். என்ன நடந்தது? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

பிரம்மாண்டமாக உருவாகும் 'ஜெயிலர் 2'
கடந்த 2023ம் ஆண்டு இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பெரும் சாதனை படைத்தது. முதல் பாகம் பெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து 'ஜெயிலர் 2' திரைப்படம் உருவாகி வருகிறது. அதே சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக 'ஜெயிலர் 2' உருவாகி வருகிறது. 2ம் பாகத்தில் ரஜினிகாந்துடன் எஸ்.ஜே.சூர்யா, பாலிவுட் நடிகர் வித்யா பாலன், பாலிவுட் மூத்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தி ஆகியோரும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயிலர் 2 படப்பிடிப்பில் விபத்து; இளைஞர் பலி
'ஜெயிலர் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், . ஒரு சில பேட்ச் வர்க் காட்சிகளை படமாக்கும் பணி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் ஆதித்யாராம் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. அங்கு அமைக்கப்பட்ட வீடு போன்ற செட் அமைப்பில் மின்விசிறிகளை மாட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (28) என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் படப்பிடிப்பு தளமே சோகத்தில் மூழ்கியது.
விபத்துக்கு காரணம் என்ன?
இது குறித்து தகவல் அறிந்ததும் கானத்தூர் காவல்துறையினர் விரைந்து வந்து கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்கசிவே விபத்துக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. படப்பிடிப்பு தளத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் இருந்ததா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே சென்னை, கோவா மற்றும் கேரளா உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில், சில கூடுதல் காட்சிகளுக்காக (Patchwork) கடந்த 15 நாட்களாக இந்த செட்டில் பணிகள் நடைபெற்று வந்தபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தொடரும் விபத்துகள்; பறிபோகும் உயிர்கள்
அண்மை காலமாக தமிழ் சினிமா படப்பிடிப்புகளின்போது அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு பா.ரஞ்சித் இயத்தில் உருவான 'வேட்டுவம்' படத்தில் விபத்து ஏற்பட்டு ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் என்பவர் உயிரிழந்தார். இதேபோல் கார்த்தி நடித்து வந்த 'சர்தார் 2' படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்து இறந்தார். இப்படியாக தொடர் விபத்துகள் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், படப்பிடிப்புகளின்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

