- Home
- குற்றம்
- இது தமிழ்நாடா.. இல்லை கொலைநாடா..? பட்டப்பகலில் திமுக வழக்கறிஞர் அலுவலகத்தில் புகுந்து படுகொ**லை!
இது தமிழ்நாடா.. இல்லை கொலைநாடா..? பட்டப்பகலில் திமுக வழக்கறிஞர் அலுவலகத்தில் புகுந்து படுகொ**லை!
தென்காசி அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, அவரது அலுவலகத்தில் மர்ம நபரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சி தலைவர் விமர்சனம்.

திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்
தென்காசி மாவட்டம் ஊர்மேலழகியான் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி. செங்கோட்டை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக முத்துக்குமாரசாமி (46) பணியாற்றி வந்தார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராகவும் இருந்தார். தென்காசி கூலக்கடை பஜாரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்துள்ளார்.
அலுவலகத்தில் புகுந்து படுகொலை
காலை 11 மணியளவில் அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர் வழக்கறிஞர் முத்துக்குமாரசாமியை அரிவாளால் முகம், தலை உள்பட பல இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் முத்துக்குமாரசாமி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதுதொடர்பாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தென்காசி போலீசார் முத்துக்குமாரசாமியை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிசிடிவி காட்சிகள் ஆய்வு
இந்த கொலை சம்பவம் தொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. படுகொலை செய்யப்பட்ட முத்துக்குமாரசாமிக்கு ராஜாத்தி என்ற மனைவியும், குணசேகரன் (14) என்ற மகனும், சரண்யா (13) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் சிறுமி முதல் முதியோர் வரை, அரசு மருத்துவர் முதல் அரசு வழக்கறிஞர் வரை என யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தென்காசியில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பட்டப்பகலில் அரசு வழக்கறிஞரின் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம கும்பல், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதோடு, உயிருக்கு பயந்து ஓடிய அவரை வீதிகளில் ஓட ஓட விரட்டிச்சென்று படுகொலை செய்துவிட்டுத் தப்பியிருக்கிறது. இது தமிழ்நாடா.. இல்லை கொலைநாடா..? இந்த சம்பவம் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கின் முகமூடியைக் கிழித்து, அதன் உண்மையான அலங்கோலத்தைக் கண்முன் நிறுத்தியுள்ளது. குற்றசம்பவங்களில் NO.1 மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியது தான் இந்த "ஸ்டாலின் மாடல் அரசின் சாதனை". என விளம்பரப்படுத்த வேண்டியது தானே பொம்மை முதல்வரே?
யாருக்கும் பாதுகாப்பில்லை
ரோட்டிலும் கொலை, கோர்ட்டிலும் கொலை, பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள், போலீஸ்காரர்களும் பாதிக்கப்படுகிறார்கள், இப்படி தமிழ்நாட்டில் சிறுமி முதல் முதியோர் வரை, அரசு மருத்துவர் முதல் அரசு வழக்கறிஞர் வரை, என யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழல். இப்படி சட்டம் ஒழுங்கை காற்றில் பறக்க விட்டுவிட்டு, தங்கள் அன்றாட வாழ்வில், எப்போது என்ன நடக்குமோ என்ற அச்ச உணர்வுடன் மக்கள் வாழ வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திய பொம்மை முதல்வருக்கு எனது கடும் கண்டனங்கள். தென்காசி அரசு வழக்கறிஞர் படுகொலை சம்பவம் குறித்து, உடனடியாக உரிய விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

