பட்ஜெட்டை விட 2 மடங்கு அதிக தொகை கொடுத்து ‘கே.ஜி.எஃப் 2’ டிஜிட்டல் உரிமையை தட்டித்தூக்கிய பிரபல ஓடிடி நிறுவனம்
KGF 2 OTT : பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ள ‘கே.ஜி.எஃப் 2’ திரைப்படம் விரைவில் ஓடிடி-யிலும் வெளியிடப்பட உள்ளது.
யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான படம் கே.ஜி.எஃப் 2. பிரசாந்த் நீல் இயக்கியிருந்த இப்படத்தில் நடிகர் யாஷுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். மேலும் ரவீனா டண்டன், சஞ்சய் தத், ஈஸ்வரி ராவ், சரண், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்து இருந்தார்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டன்று வெளியான இப்படத்திற்கு பட்டிதொட்டியெங்கும் அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படம் உலகமெங்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பியது.
இப்படம் வெளியாகி மூன்று வாரங்களுக்கு மேல் ஆகும் நிலையில், பெரும்பாலான இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படம் இதுவரை ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து உள்ளது. விரைவில் இப்படம் ஓடிடி-யிலும் வெளியிடப்பட உள்ளது.
இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அந்நிறுவனம் 320 கோடி ரூபாய் கொடுத்து ஓடிடி உரிமையை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இது படத்தின் பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாம். இதனால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இப்படம் வருகிற மே 27-ந் தேதி ஓடிடியில் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... BiggBoss Gabriella : சொகுசு கார் வாங்கிய பிக்பாஸ் கேப்ரியல்லா - விலை எவ்ளோனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!