கோலிவுட்டின் 1000 கோடி வசூல் கனவை நனவாக்குமா 2025? தமிழ் படங்களின் லைன் அப் இதோ
Upcoming Tamil Movies in 2025 : தமிழ் சினிமாவில் 2025-ம் ஆண்டு ரிலீஸ் ஆக உள்ள விஜய், அஜித், சூர்யா, ரஜினி, கமல் ஆகியோரின் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Upcoming Tamil Movies in 2025
பான் இந்தியா படங்களின் வரவால் ஆயிரம் கோடி வசூல் என்பது தற்போது அசால்டான ஒன்றாக மாறிவிட்டது. இதுவரை இந்திய சினிமாவில் 7 படங்கள் மட்டுமே ஆயிரம் கோடி வசூல் சாதனையை நிகழ்த்தி உள்ளன. அதில் பாலிவுட்டில் ஷாருக்கானின் ஜவான் மற்றும் பதான், அமீர்கானின் தங்கல் ஆகிய படங்களும், டோலிவுட்டில் ராஜமவுலி இயக்கிய பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 ஆகிய 3 படங்களும், கன்னடத்தில் யாஷ் நடித்த கேஜிஎஃப் பார்ட் 2 படமும் ஆயிரம் கோடி வசூல் என்கிற இமாலய சாதனையை படைத்துள்ளன.
Tamil Cinema 2025
மேற்கண்ட மூன்று திரையுலகிற்கு நிகரான பெயரையும் புகழையும் கொண்ட கோலிவுட்டிற்கு இதுவரை ஆயிரம் கோடி வசூல் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. தமிழில் இதுவரை ரஜினியின் 2.0 படம் மட்டுமே 800 கோடி வரை வசூலித்திருக்கிறது. அதையே கடந்த 6 ஆண்டுகளாக எந்த தமிழ் படங்களாலும் முறியடிக்க முடியவில்லை. 2024-ம் ஆண்டு அந்த சாதனை முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் அந்தக் கனவு நனவாகவில்லை.
Coolie
இதனால் தமிழ் சினிமாவின் பார்வை 2025-ம் ஆண்டு மீது திரும்பி இருக்கிறது. ஏனெனில் அடுத்த ஆண்டு வரிசையாக பெரிய ஸ்டார்களின் படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. குறிப்பாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இதுதவிர நடிகர் விஜய்யின் தளபதி 69 படமும் 2025ல் தான் ரிலீஸ் ஆக உள்ளது. நடிகர் விஜய்யின் கடைசி படம் என்பதால் இதற்கும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார்.
இதையும் படியுங்கள்... தேசிய விருது யாருக்கு? 2024-ல் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய 4 நடிகர்கள்!
Thalapathy 69
இதுதவிர அடுத்த ஆண்டு கமல்ஹாசன், அஜித்குமார், சூர்யா ஆகியோருக்கு டபுள் டமாக்கா ஆண்டாக அமைய உள்ளது. ஏனெனில் அவர்கள் அனைவருக்கும் 2 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. கமல்ஹாசனுக்கு ஷங்கரின் இந்தியன் 3 மற்றும் மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் திரைப்படம் வெளிவர உள்ளது. அதேபோல் அஜித்துக்கு பொங்கல் விருந்தாக விடாமுயற்சியும், அவரின் பிறந்தநாளுக்கு குட் பேட் அக்லியும் ரிலீஸ் ஆக காத்திருக்கிறது. சூர்யாவுக்கு கார்த்திக் சுப்புராஜ் படமும், ஆர்.ஜே.பாலாஜி படமும் வெளிவர உள்ளது.
Thug Life
அமரன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியால் சிவகார்த்திகேயன் படங்கள் மீதும் சற்று கவனம் திரும்பி இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடிக்கும் படம் அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது. இதுதவிர தனுஷ் நடித்த பான் இந்தியா படமான குபேரா, அவர் இயக்கி நடித்துள்ள இட்லி கடை ஆகிய படங்களும் அடுத்த ஆண்டு ரிலீசுக்கு காத்திருக்கின்றன. இந்த படங்களில் ஏதாவது ஒரு படம் கிளிக் ஆனால் கோலிவுட் நிச்சயம் ஆயிரம் கோடி கிளப்பில் இணைந்துவிடும்.
இதையும் படியுங்கள்... 2024-ல் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்? தமிழ்நாட்டில் அதிக வசூல் அள்ளிய டாப் 10 படங்கள் லிஸ்ட் இதோ