நான் இன்றி இசையா? இளையராஜாவுக்கு ஷாக் கொடுத்த பாலச்சந்தர்; இருவரும் பிரிந்த கதை தெரியுமா?
இசைஞானி இளையராஜாவும், இயக்குனர் சிகரம் பாலச்சந்தரும் எதற்காக பிரிந்தார்கள்? அவர்கள் இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என்பதை பார்க்கலாம்.

Ilaiyaraaja Conflict With K Balachander
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக கோலோச்சியவர் கே பாலச்சந்தர். இவர் நாயகர்களை நம்பி படம் எடுத்ததில்லை. அவரின் கதையை தான் முழுக்க முழுக்க நம்புவார். அதனால் தான் இவரின் கதையில் நடித்த பலர் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்திருக்கிறார்கள். பாலச்சந்தர் படங்களில் கதைக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்குமோ.. அதே அளவு முக்கியத்துவம் இசைக்கும் இருக்கும். இவர் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் இசையமைப்பாளர் வி குமாரை தான் தன்னுடைய படங்களுக்கு இசையமைப்பாளராக பயன்படுத்தி வந்தார். இவர்கள் இருவருமே நாடகங்களில் இருந்தே ஒன்றாக பயணித்து வருகிறார்கள்.
இளையராஜாவை நெருங்காமல் இருந்த பாலச்சந்தர்
பின்னர் படிப்படியாக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பக்கம் செல்கிறார் பாலச்சந்தர். இந்தக் கூட்டணியில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் வந்தன. எம்.எஸ்.வியை தொடர்ந்து 1976-ல் இளையராஜா இசை உலகில் காலடி எடுத்து வைக்கிறார். அன்னக்கிளியில் இருந்து இளையராஜாவின் இசை சாம்ராஜ்ஜியம் தொடங்குகிறது. அவருடன் பணியாற்ற முன்னணி இயக்குனர்களே க்யூவில் நின்றாலும் பாலச்சந்தர் மட்டும் இளையராஜா பக்கம் தலைகாட்டாமல் இருந்து வந்தார். ஒன்றிரண்டு ஆண்டுகள் அல்ல மொத்தம் 9 ஆண்டுகள் இந்த கூட்டணி இணையாமலே இருந்து வந்தது. இதையடுத்து சிந்து பைரவி படம் மூலம் முதன் முறையாக இளையராஜா உடன் கூட்டணி அமைத்தார் பாலச்சந்தர்.
4 ஆண்டுகளில் முறிந்த கூட்டணி
இந்த கூட்டணி வெறும் நான்கு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. இந்த நான்கு ஆண்டுகளில் இருவரும் இணைந்து 20 படங்களில் பணியாற்றினர். அதில் பாலச்சந்தர் இயக்கிய படங்கள் 6 தான். மற்றதெல்லாம் அவர் தயாரிப்பில் வெளிவந்த படங்கள். இவர்கள் இணைந்து பணியாற்றிய 6 படங்களுமே மாஸ்டர் பீஸ் படங்கள் என்றே சொல்லலாம். குறிப்பாக சிந்து பைரவி படத்தின் இசை தனக்கே ஒரு புது அனுபவமாக இருந்தது, அந்த அளவுக்கு தன்னை மிகவும் யோசிக்க வைத்த இயக்குனர் என்றால் அது பாலச்சந்தர் தான் என இளையராஜாவே பேட்டியில் கூறி இருக்கிறார். இவர்கள் கூட்டணியில் வந்த சிந்து பைரவி, உன்னால் முடியும் தம்பி, புதுப்புது அர்த்தங்கள் போன்ற படங்களில் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.
இளையராஜா - பாலச்சந்தர் இடையே என்ன பிரச்சனை?
இதில் இளையராஜா - பாலச்சந்தர் இருவரும் கடைசியாக இணைந்து பணியாற்றிய படம் புதுப்புது அர்த்தங்கள். கடந்த 1989-ம் ஆண்டு இப்படம் திரைக்கு வந்தது. இப்படத்தின் போது தான் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த ஆண்டு மட்டும் இளையராஜா மொத்தம் 32 படங்களுக்கு இசையமைத்தாராம். அன்றைய காலகட்டத்தில் தீபாவளி பண்டிகை என்றால் படத்தை ரிலீஸ் செய்து நல்ல வசூல் பார்த்துவிடலாம் என பலரும் போட்டி போடுவார்களாம். பெரும்பாலான படங்களுக்கு இளையராஜா தான் இசை என்பதால் அவருக்கும் நெருக்கடியான சூழல் இருந்து வந்ததாம்.
இளையராஜா இன்றி நடந்த ரீ ரெக்கார்டிங்
அப்படி புதுப்புது அர்த்தங்கள் படத்தை குறிப்பிட்ட நாளுக்குள் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதால் இளையராஜாவுக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார் பாலச்சந்தர். அப்போது தான் இருவருக்குள்ளும் பிரச்சனை ஆரம்பித்திருக்கிறது. லேட் ஆனதால், இளையராஜாவிடம் கேட்காமலேயே ரீ ரெக்கார்டிங் பணிகளை முடித்துவிட்டாராம் பாலச்சந்தர். இதை அறிந்த இளையராஜா ஷாக் ஆகிவிட்டாராம். ஏனெனில் அவர் ஏற்கனவே பண்ணிய இசையை ஆங்காங்கே ஒட்ட வைத்து படத்தை ரிலீஸ் செய்துவிட்டார்களாம். இதனால் கடுப்பான இளையராஜா இனி பாலச்சந்தர் படங்களுக்கு இசையமைக்க மாட்டேன் என முடிவெடுத்துவிட்டாராம். இந்த தகவலை திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி யூடியூப் பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.