- Home
- Cinema
- Solomon Pappaiya : ஒரே ஒரு காமெடி சீனால் சினிமாவே வேண்டாம் என தூக்கியெறிந்த சாலமன் பாப்பையா - பலரும் அறிந்திடாத தகவல்
Solomon Pappaiya : ஒரே ஒரு காமெடி சீனால் சினிமாவே வேண்டாம் என தூக்கியெறிந்த சாலமன் பாப்பையா - பலரும் அறிந்திடாத தகவல்
Reason Behind Solomon Pappaiya Quit Acting : சாலமன் பாப்பையா சிவாஜி படத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகினார். அவரின் விலகலுக்கு பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணத்தை பார்க்கலாம்.

Why Solomon Pappaiya Quit Acting?
தமிழ் பட்டிமன்ற உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் மறைந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா. பட்டிமன்ற மேடைகளில் தனது நகைச்சுவை கலந்த பேச்சால் ரசிகர்களை கவர்ந்த அவர், சினிமாவிலும் சில படங்களில் தோன்றியுள்ளார். குறிப்பாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘சிவாஜி’ திரைப்படத்தில் அவர் நடித்திருந்த காட்சிகள் அப்போது மிகுந்த கவனம் பெற்றன. ஆனால், ‘சிவாஜி’ படத்துக்குப் பிறகு சாலமன் பாப்பையா ஏன் திரைப்படங்களில் நடிக்கவில்லை? இதற்குப் பின்னால் இருந்த காரணம் குறித்து பட்டிமன்ற பேச்சாளர் ராஜா தற்போது பகிர்ந்துள்ள தகவல் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சர்ச்சையை ஏற்படுத்திய ‘அங்கவை, சங்கவை’ காட்சி
‘சிவாஜி’ படத்தில் இடம்பெற்ற அங்கவை, சங்கவை தொடர்பான நகைச்சுவைக் காட்சி அப்போது திரையரங்குகளில் ரசிகர்களிடம் சிரிப்பை ஏற்படுத்தியது. அதேநேரம், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் அந்தக் காட்சி கடும் எதிர்ப்பையும் உருவாக்கியது. வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற அங்கவை, சங்கவை என்ற பெண் பெயர்களை நகைச்சுவைக்காக பயன்படுத்திய விதம் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், படக்குழுவுக்கு எதிராக விமர்சனங்களும் எழுந்தன.
சொல்லப்பட்ட கதை வேறு... படமாக்கப்பட்ட காட்சி வேறு?
இந்த விவகாரம் குறித்து பட்டிமன்ற பேச்சாளர் ராஜா அளித்த பேட்டியில் முக்கியமான தகவலை தெரிவித்துள்ளார். அவரது கூற்றுப்படி, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு சாலமன் பாப்பையாவிடம் கூறப்பட்ட கதை மற்றும் பின்னர் அவரை வைத்து படமாக்கப்பட்ட காட்சிகளுக்கு இடையே பெரிய வித்தியாசம் இருந்ததாக கூறப்படுகிறது. தனக்கு விளக்கப்பட்ட கதையின் அடிப்படையில் நடிக்க சம்மதித்த நிலையில், படப்பிடிப்பின்போது காட்சிகள் வேறு விதமாக எடுக்கப்பட்டதாக ராஜா தெரிவித்துள்ளார்.
மனவேதனை... அதன்பிறகு எடுத்த முடிவு!
‘சிவாஜி’ படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளால் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து எதிர்ப்பு எழுந்தது சாலமன் பாப்பையாவுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் ராஜா குறிப்பிட்டுள்ளார். தான் எதிர்பார்த்த விதத்தில் இல்லாமல் காட்சிகள் உருவாக்கப்பட்டதும், அதன் காரணமாக சர்ச்சையில் சிக்கியதும் அவரை பெரிதும் பாதித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இனி திரைப்படங்களில் நடிப்பதே இல்லை என்ற முடிவை சாலமன் பாப்பையா எடுத்ததாக பட்டிமன்ற ராஜா தெரிவித்துள்ளார்.
‘சிவாஜி’யுடன் முடிந்த சினிமா பயணம்
பட்டிமன்ற மேடைகளில் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களிடம் தமிழ் இலக்கியத்தையும் சமூக சிந்தனைகளையும் எளிமையான மொழியில் கொண்டு சென்ற சாலமன் பாப்பையா, சினிமாவில் தொடர்ந்து நடிக்கக்கூடிய வாய்ப்புகள் இருந்தபோதிலும் அதிலிருந்து விலகியே இருந்தார். சிவாஜி படத்தில் நடித்ததால் வெடித்த சர்ச்சைக்கு பின் சாலமன் பாப்பையா சினிமா பக்கம் தலைகாட்டவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

