- Home
- Tamil Nadu News
- Solomon Pappaiya : யார் இந்த சாலமன் பாப்பையா? வறுமையில் தொடங்கி பத்மஸ்ரீ வரை... தமிழறிஞரின் பிரமிக்க வைக்கும் பயணம்!
Solomon Pappaiya : யார் இந்த சாலமன் பாப்பையா? வறுமையில் தொடங்கி பத்மஸ்ரீ வரை... தமிழறிஞரின் பிரமிக்க வைக்கும் பயணம்!
Solomon Pappaiya Passes Away : புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரைப் பற்றிய சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்.

Untold Story of Solomon Pappaiya
தமிழ் அறிஞரும், பிரபல பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா தனது 90வது வயதில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிலும், பட்டிமன்றக் கலையுலகிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வறுமையிலும் கல்வி மீது கொண்ட ஆர்வம்
1936ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் சுந்தரம் - பாக்கியம் தம்பதியருக்கு ஒன்பதாவது மகனாக சாலமன் பாப்பையா பிறந்தார். பொருளாதார வசதிகள் இல்லாத சூழலில் வளர்ந்த அவர், நண்பர்களின் உதவியுடன் தனது கல்வியைத் தொடர்ந்து படித்தார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், பின்னர் தியாகராசர் கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியில் சேர்ந்த சாலமன் பாப்பையா, பின்னர் அத்துறையின் தலைவராகவும் உயர்ந்தார். பணிக்காலத்தை நிறைவு செய்து ஓய்வு பெற்ற பிறகும் தமிழ் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
பட்டிமன்றத்தை மக்கள் ரசிக்கும் கலையாக மாற்றியவர்
1960களில் பட்டிமன்ற நடுவராக தனது பயணத்தைத் தொடங்கிய சாலமன் பாப்பையா, சமூக பிரச்சினைகள், குடும்ப உறவுகள், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தனது தனித்துவமான பேச்சாற்றலை வெளிப்படுத்தினார். கடினமான இலக்கியக் கருத்துகளையும் எளிமையான தமிழில், நகைச்சுவை கலந்து மக்களிடம் கொண்டு சேர்த்தது அவரது தனிச்சிறப்பாக இருந்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகவும் அவரது பட்டிமன்றங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. உலகம் முழுவதும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் பல்வேறு தரப்பு மக்களிடம் கொண்டு சென்ற பெருமை அவருக்கு உண்டு.
இலக்கியப் பணியிலும் தனி முத்திரை
பட்டிமன்ற மேடைகளில் மட்டுமின்றி தமிழ் இலக்கியத்திலும் சாலமன் பாப்பையா குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். திருக்குறள், கம்பராமாயணம் உள்ளிட்ட முக்கியமான தமிழ் இலக்கியப் படைப்புகளுக்கு உரை எழுதியுள்ளார். தமிழை பண்டிதர்களுக்கான மொழியாக மட்டும் இல்லாமல், சாதாரண மக்களும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துச் சென்றதில் அவரது பங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
சாலமன் பாப்பையா நடித்த திரைப்படங்கள்
பட்டிமன்ற நடுவராகவும் தமிழ் அறிஞராகவும் பிரபலமான சாலமன் பாப்பையா திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான 'பாய்ஸ்' திரைப்படத்திலும், ரஜினிகாந்த் நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளியான 'சிவாஜி' படத்திலும் அவர் நடித்திருந்தார். இதன் மூலம் திரைத்துறையிலும் தனது தனித்துவமான பங்களிப்பை பதிவு செய்தார்.
பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகள்
தமிழுக்கும், பட்டிமன்றக் கலைக்கும் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக பல்வேறு விருதுகளும் கௌரவங்களும் வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் கலைமாமணி விருது, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முத்தமிழ்ப் பேரறிஞர், திருக்குறள் செம்மல் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார். மேலும், 2021ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டார். சாலமன் பாப்பையாவின் மனைவி கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காலமானார். இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
தமிழ் உலகிற்கு பேரிழப்பு
பல தலைமுறைகளுக்கு பட்டிமன்றம் வழியாக தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் கொண்டு சேர்த்த சாலமன் பாப்பையாவின் மறைவு, தமிழ் ஆர்வலர்கள் மற்றும் இலக்கிய உலகினரிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது நகைச்சுவை கலந்த பேச்சாலும், எளிய தமிழ் நடையாலும், ஆழமான இலக்கிய அறிவாலும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தவர் சாலமன் பாப்பையா. அவரது மறைவு தமிழ் இலக்கியத்திற்கும், பட்டிமன்றக் கலைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

