விஜய் கேரக்டர் முதல் ரிலீஸ் தேதி வரை.. தளபதி 68 வீடியோவில் இவ்ளோ விஷயம் ஒளிஞ்சிருக்கா! இதை கவனிச்சீங்களா நண்பா
விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ள தளபதி 68 படத்துக்கான அறிவிப்பு வீடியோவில் ஒளிந்திருக்கும் விஷயங்களைப் பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமாவின் தளபதியாக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் லியோ படம் தற்போது தயாராகி வருகிறது. அடுத்ததாக விஜய் நடிக்க உள்ள தளபதி 68 படத்தை யார் இயக்கப்போகிறார் என்பது தான் கடந்த ஒரு மாதமாக கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக இருந்து வந்தது. இந்த லிஸ்ட்டில் அட்லீ, தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரது பெயர்கள் அடிபட்டு இறுதியாக யாரும் எதிர்பார்க்காத விதமாக வெங்கட் பிரபு வசம் சென்றிருக்கிறது அந்த வாய்ப்பு.
விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி அமைப்பது இதுவே முதன்முறை. அஜித்துக்கு மங்காத்தா என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த வெங்கட் பிரபு, விஜய்க்கும் அதுபோன்ற ஒரு தரமான வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. நேற்று தளபதி 68 படத்தின் அறிவிப்பு சர்ப்ரைஸாக வெளியிடப்பட்டது. அதன்படி இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும் யுவன் சங்கர் ராஜா தான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டு ஒரு ஸ்பெஷல் வீடியோவையும் வெளியிட்டு இருந்தனர்.
அந்த வீடியோவில் வெறும் அறிவிப்பு வீடியோவாக மட்டும் கடந்துவிட முடியாது. ஏனெனில் அதில் எக்கச்சக்கமான விஷயங்களையும் ஒளித்து வைத்திருக்கிறார்கள். அவை என்னவென்று இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
A வெங்கட் பிரபு Puzzle?
தளபதி 68 அறிவிப்பு வீடியோவில் முதலில் காட்டப்படுவது ஒரு பேப்பர் கட், டேபிளில் பேப்பர் விரித்தபடி இருக்க அதன் அருகில் ஒரு ரப்பர் ஸ்டாம்ப்பும் இடம்பெற்று இருக்கிறது. இதைப்பார்க்கும் போது ஒரு அலுவலக சூழலில் அதன் பின்னணி அமைந்திருக்கிறது.
அந்த பேப்பரில் இடம்பெற்றிருக்கும் Puzzle என்பதில் 068 என குறிப்பிட்டுள்ளனர். இது விஜய்யின் 68-வது படம் என்பதை குறிக்கும் விதமாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி வழக்கமாக வெங்கட்பிரபு எந்த படம் எடுத்தாலும், அதன் டைட்டிலின் கீழ் ஒரு டேக் லைன் கொடுத்திருப்பார். உதாரணத்திற்கு கடைசியாக அவர் இயக்கத்தில் வெளிவந்த கஸ்டடி பட டைட்டிலின் கீழ் வெங்கட் பிரபு ஹண்ட் என இடம்பெற்றிருக்கும். அதேபோல் தளபதி 68 படம் வெங்கட் பிரபு Puzzle என குறிப்பிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அரசு அதிகாரியாக நடிக்கிறாரா விஜய்?
தளபதி 68 அறிவிப்பு வீடியோவில் நாம் முதலில் பார்த்ததும் Puzzle என்பது மட்டுமே நம் கண்ணை கவரும் வகையில் அமைந்திருந்தாலும், அதனை சுற்றி இருக்கும் விளம்பரங்களும் சிலவற்றை உணர்த்துகின்றன. அதில் கார் பற்றிய விளம்பரம், நிலம் சம்பந்தமான விளம்பரம், லீகல் நோட்டீஸ் மற்றும் வங்கிக்கடன் சம்பந்தப்பட்ட விஷயங்களும் அதில் இடம்பெற்று இருக்கின்றன. இதையெல்லாம் பார்க்கும் போது இப்படத்தில் விஜய் ஒரு அரசு அதிகாரியாகவோ, கலெக்டராகவோ அல்லது அரசு சார்ந்த ஒரு முக்கிய பொறுப்பில் இருப்பவராகவோ நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
பச்சை மை
இப்படத்தில் விஜய் அரசு சார்ந்த பணியில் இருப்பார் என்பதை யூகிக்க இன்னொரு காரணமும் இருக்கிறது. அது என்னவென்றால், அந்த வீடியோவில் படக்குழுவை Puzzle மூலம் தான் அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த Puzzle-ல் உள்ள விஜய், வெங்கட் பிரபு, யுவன், ஏஜிஎஸ் ஆகிய பெயர்களை ஒரு பேனாவை வைத்து குறிப்பிடுகிறார்கள். அந்த பேனா மை பச்சை நிறத்தில் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. பெரிய பதவியில் இருப்பவர்கள் தான் பச்சை நிற மையை பயன்படுத்துவார்கள் என்பதால் இதில் விஜய் அரசு அதிகாரியாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக நம்மால் யூகிக்க முடிகிறது.
இதையும் படியுங்கள்... இந்த உண்மை சம்பவம் தான் தலைவர் 170 படத்தின் கதையா? கசிந்தது தகவல் எகிறும் எதிர்பார்ப்பு!
ரிலீஸ் தேதி
இந்த Puzzle-க்கு கீழே ஒரு முக்கிய விஷயத்தை குறிப்பிட்டுள்ளார்கள். அதாவது அந்த பேப்பரில் காட்டப்பட்டுள்ள செய்தி ஒன்றில் ஏப்ரலுக்கு பின்னர் மே மாதத்தில் தான் வெப்பம் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. மே மாதத்தில் வெயில் அதிகமாக இருக்கும் என்பதை குறிக்கும் விதமாக அந்த செய்தி இருந்தாலும், அதன்மூலம் படத்தின் ரிலீஸ் தேதியையும் சூசகமாக சொல்லி உள்ளார்களோ என்பதையும் நம்மால் யூகிக்க முடிகிறது. இப்படம் 2024-ம் ஆண்டு ரிலீஸ் செய்யப்படும் என கூறப்படுவதால், அது மே மாதமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது என்பது இதன் மூலம் தெரியவருகிறது.
பேனாவில் VV
தளபதி 68 அறிவிப்பு வீடியோவில் ஒரு பேனாவும் முக்கிய பங்காற்றி இருக்கிறது. அந்த பேனாவை நன்கு கவனித்தால் அதில் VV என குறிப்பிடப்பட்டு உள்ளது. விஜய், வெங்கட் பிரபு ஆகிய இருவரின் பெயரும் முதலில் வி-யில் தான் துவங்குகிறது என்பதால் அதை குறிப்பிடும் விதமாக அந்த பேனாவை வடிவமைத்து உள்ளனர்.
விஜய்யுடன் நடிக்கிறாரா ஜூனியர் என்.டி.ஆர்?
தளபதி 68 வீடியோவில் உள்ள Puzzle-ல் விஜய், வெங்கட் பிரபு, ஏஜிஎஸ், யுவன் என ஒவ்வொரு பெயராக குறிப்பிட்டு இருந்தாலும், அதில் குறிப்பிடப்படாத ஒரு பெயரும் ஒளிந்திருக்கிறது. அது தான் NTR. இதை பார்க்கும் போது இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் விஜய்யுடன் நடிக்க இருக்கிறாரா என்கிற கேள்வி எழுகிறது.
இதையும் படியுங்கள்... 2 வருடம் கேப்... யாரும் இல்லாத காட்டில் 50 நாள் படப்பிடிப்பு! வீரன் பட அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட ஆதி!