- Home
- Cinema
- நெல்சனுக்கு வந்த மவுசு... மீண்டும் தூசி தட்டப்படுகிறதா சிம்புவின் வேட்டை மன்னன்?- தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்
நெல்சனுக்கு வந்த மவுசு... மீண்டும் தூசி தட்டப்படுகிறதா சிம்புவின் வேட்டை மன்னன்?- தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்
Vettai mannan movie : வேட்டை மன்னன் திரைப்படம் மீண்டும் உருவாகுமா? இல்லையா? என்பது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கோலமாவு கோகிலா, டாக்டர் என அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த நெல்சன் தான் தற்போது கோலிவுட்டில் மோஸ்ட் வாண்டட் டைரக்டராக வலம் வருகிறார். தற்போது இவர் கைவசம் விஜய்யின் பீஸ்ட் மற்றும் ரஜினியின் 169-வது படம் ஆகியவை உள்ளன. இதில் பீஸ்ட் படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ரஜினி 169 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இந்நிலையில், நெல்சன் இயக்கிய முதல் படமான வேட்டை மன்னன் மீண்டும் உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் பரவி வந்தது. சிம்பு நடித்திருந்த இப்படம் பாதியிலேயே முடங்கியது. இந்நிலையில், அப்படம் மீண்டும் உருவாகுமா? இல்லையா? என்பது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: "நிறைய கமிட்மண்ட்ஸ் இருந்ததால் வேட்டை மன்னன் படத்தை பாதியிலேயே நிறுத்தி வைத்திருந்தேன். வேட்டை மன்னன் படமே மீண்டும் தொடங்கப்பட வாய்ப்பிருக்கு. இப்படத்தின் இரண்டாவது பாதி முழுவதுமே ஜப்பான் நாட்டில் எடுக்க திட்டமிட்டிருந்தோம். அதுக்கு கொஞ்சம் டைம் தேவைப்பட்டது. அந்த கேப்ல சிம்பு வாலு படத்தை முடிக்க திட்டமிட்டார்.
வேட்டை மன்னன் படத்திற்கு பட்ஜெட் கொஞ்சம் அதிகம், அதனால பட்ஜெட்டுக்கு உதவியா இருக்கும்னு என்னையே வாலு படத்தையும் தயாரிக்க சொன்னார் சிம்பு. ஆனால் வாலு பட ரிலீஸ் தள்ளிப்போச்சு! அந்த நேரத்துல சிம்பு நிறைய உதவியா இருந்தாரு. அந்த படத்துக்கு பிறகு எனக்கு கொஞ்சம் டைம் தேவைப்பட்டது. அதனால தான் வேட்டை மன்னன் படத்தை எடுக்க முடியல. நெல்சனும் வேற புராஜெக்ட் வருது பண்ணவானு கேட்டாரு. நானும் தாராளமா பண்ணுங்க. எப்ப தேவையோ அப்ப கூப்பிடுறேன்னு சொன்னேன்.
நான் சந்தித்த இயக்குனர்களிலேயே நெல்சன் தான் நல்ல இயக்குனர். இயக்குனர் ஆகனும்னு ஆசைப்பட்டேன். ஆனா ஆக முடியல. அதனாலதான் வரிசையாக புதுமுகங்களை வைத்து படம் எடுத்தேன். வாலி படம் பண்ணும் போது, அஜித்துக்கு அவ்வளவு மார்கெட் கிடையாது. ஆனா கதைய நம்பி படம் எடுத்தோம். ஹிட் ஆச்சு.
இப்போ இருக்குற தயாரிப்பாளர்கள் யாரும் கதைக்காக படம் செய்வதில்லை. அதனால்தான் நிறைய படம் ஃபிளாப் ஆகுது. கடந்த 3 வருஷத்துல பெரிய நடிகர்களோட படங்கள தான் எல்லோரும் வாங்க தயாரா இருக்காங்க. சிறு பட்ஜெட் படங்கள வாங்க யாருமே முன்வருவதில்லை. எல்லாத்துக்கும் காரணம், பெரிய நடிகர்களின் படங்கள் இரண்டு, மூனு நாள்லயே வசூலை கொடுத்துவிடுகிறது” என்றார் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி.
இதையும் படியுங்கள்.... BB Ultimate : மரியாத கொடுங்க... யாரும் முட்டாள் கிடையாது- ஹவுஸ்மேட்ஸின் செயலால் கடுப்பாகி பொளந்துகட்டிய சிம்பு