மங்காத்தா ரிலீசாகி 11 ஆண்டுகள் ஆச்சு..! அன்சீன் போட்டோஸை வெளியிட்டு அஜித் ரசிகர்களை குஷியாக்கிய வெங்கட் பிரபு
Mankatha : மங்காத்தா திரைப்படம் ரிலீசாகி இன்றுடன் 11 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக அப்பட ஷூட்டிங்கின் போது எடுத்த அன்சீன் புகைப்படங்களை இயக்குனர் வெங்கட் பிரபு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் சினிமாவில் எந்தவித பின்புலமும் இல்லாமல் அறிமுகமாகி தன்னுடைய விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் முன்னேறி இன்று தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இதுவரை 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அஜித் சினிமாவில் அதிக அளவில் தோல்விகளை சந்தித்துள்ளார்.
அந்த வகையில் கடந்த 2007-ம் ஆண்டு பில்லா, கிரீடம் என வரிசையாக இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த அஜித்துக்கு அதன்பின்னர் 4 ஆண்டுகள் கடுமையாக இருந்தன. அந்த காலகட்டத்தில் ஏகன், அசல் என அடுத்தடுத்து இரண்டு படங்கள் பிளாப் ஆனதால் அஜித்தின் கெரியர் கடும் சரிவைச் சந்தித்தது.
இதையடுத்து கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்போடு இருந்த அஜித், தனது 50-வது படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு வழங்கினார். சரோஜா, சென்னை 28 என இரண்டு படங்கள் மட்டுமே இயக்கியிருந்த அவருக்கு அஜித் வாய்ப்பளித்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அந்த படத்துக்கு மங்காத்தா என பெயரிட்டு இருந்தனர்.
இதையும் படியுங்கள்... இறைவா நீ ஆணையிடு... தாயே எந்தன் மகளாய் மாற..! அம்மா பாடல் மூலம் நிஜ வாழ்விலும் யுவனுக்கு நடந்த மேஜிக்
அப்படம் கடந்த 2011-ம் ஆண்டு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 31-ந் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. அடுத்தடுத்து 2 தோல்வி படங்களை கொடுத்த அஜித்துக்கு மங்காத்தா படம் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்து அவரது கெரியரில் மிக முக்கியமான படமாகவும் அமைந்தது. குறிப்பாக அப்படத்திற்காக யுவன் போட்ட பிஜிஎம் இன்றளவும் மாஸ் குறையாமல் உள்ளது.
இந்நிலையில், மங்காத்தா திரைப்படம் ரிலீசாகி இன்றுடன் 11 ஆண்டுகள் ஆகிறது. இதனை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் #11YearsOfCultMANKATHA என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். அப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, தன் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி என கூறி மங்காத்தா ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட அஜித்தின் அன்சீன் புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... ஏன்டி நான் படம் பண்ணும்போது நீ இல்லாம போன... ரேகா நாயரிடம் வருத்தப்பட்ட பாரதிராஜா