இறைவா நீ ஆணையிடு... தாயே எந்தன் மகளாய் மாற..! அம்மா பாடல் மூலம் நிஜ வாழ்விலும் யுவனுக்கு நடந்த மேஜிக்
Yuvan Shankar Raja : தமிழ் சினிமாவில் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா, இன்று தனது 43-அது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான இசையால் 25 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமாக பயணித்து வரும் யுவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், அவரின் பாடல் வரிகளைப் போல் நிஜ வாழ்விலும் அவருக்கு நடந்த மேஜிக் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
யுவன் சங்கர் ராஜா அம்மா மீது அலாதி பிரியம் கொண்டவர். யுவனின் இசை பயணம் இந்த அளவுக்கு வெற்றிகரமாக அமைந்ததற்கு யுவனின் தாயார் ஜீவாவும் ஒரு காரணம் தான். சினிமாவில் தோல்விகளையும், விமர்சனங்களையும் கண்டு துவண்டு போன யுவனுக்கு புத்துயிர் கொடுத்தது அவரது அம்மா தான்.
அந்த வகையில் கடந்த 2011-ம் ஆண்டு ஒரு நாள் இரவு வீட்டிற்கு பயங்கர பசியுடன் வந்த யுவன், அனைவரும் தூங்கிவிட்டதால் தானே சமையலறைக்கு சென்று சமைக்க தொடங்கியுள்ளார். அப்போது சத்தம் கேட்டு எழுந்து வந்த தாயிடம், இன்னும் நீ தூங்கலையா என கேட்டுள்ளார் யுவன், அப்போது என் பையனுக்கு பசிக்கும் போது எனக்கு எப்படி தூக்கம் வரும் என சொல்லிவிட்டு தன் கையால் சமைத்து கொடுத்துள்ளார்.
அவர் சமையல் செய்து வந்த சமயத்தில் டிவியில் ராம் படத்திற்காக யுவன் இசையமைத்த “ஆராரிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண் உரங்கு” என்ற பாடல் ஓடிக்கொண்டிருந்ததாம். இதைக் கேட்ட யுவனின் தாயார், நீ போட்ட பாட்டிலேயே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு இதுதாண்டா என சொன்னாராம். நீ என்ன கைல வச்சு தாலாட்டி தூங்க வைக்குற மாதிரி இருக்குடா என யுவனிடம் சொல்லி உள்ளார் அவரது தாய் ஜீவா.
இதையும் படியுங்கள்... ஏன்டி நான் படம் பண்ணும்போது நீ இல்லாம போன... ரேகா நாயரிடம் வருத்தப்பட்ட பாரதிராஜா
இதைக்கேட்டு யுவன் மிகவும் சந்தோஷப்பட்டாராம். ஏனேனில் தனது அம்மாவுக்காகத் தான் அந்த பாடலையே யுவன் இசையமைத்து இருந்தாராம். 2005-ம் ஆண்டிலேயே வெளிவந்த அந்த பாடலை 6 ஆண்டுகள் கழித்து, தனக்கு மிகவும் பிடித்த பாடல் என தன் தாயார் சொன்னதை கேட்டதும் யுவன் ரொம்ப ஹாப்பியாகி விட்டாராம்.
இவ்வாறு தாயின் பாராட்டை கேட்டு பூரிப்படைந்த யுவனுக்கு, அடுத்த 4 நாட்களிலேயே பேரதிர்ச்சி காத்திருந்தது. மகனை பாராட்டிய அடுத்த 4 நாட்களில் யுவனின் தாயார் ஜீவா மரணமடைந்து விடுகிறார். தாய் தான் தன்னுடைய உலகம் என்று இருந்த யுவனுக்கு அவரது இழப்பை தாங்கிக் கொள்ளவே முடியவில்லையாம். உலகமே இருண்டது போல் ஆகிவிட்டதால் அவரால் இசையிலும் கவனம் செலுத்த முடியவில்லை.
இதனால் 2011 முதல் 2013 வரை இரண்டு ஆண்டுகள் சரிவர இசையமைக்காமல் இருந்த யுவன் போதைப் பழக்கத்திற்கும் அடிமையாகிவிட்டாராம். இவ்வாறு அம்மாவின் பிரிவால் வாடி வந்த யுவனுக்கு அவரது அம்மாவின் பிறந்தநாள் அன்றே ஒரு அதிசயம் நடக்கிறது. தனது அம்மாவின் பிறந்தநாள் அன்றே யுவனுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. இதுதான் அவரது வாழ்க்கையை மாற்றிய தருணம் என்றே சொல்லலாம்.
ராம் படத்திற்காக அவர் இசையமைத்த ஆராரிராரோ பாடலில் இடம்பெறும் “இறைவா நீ ஆணையிடு... தாயே எந்தன் மகளாய் மாற” என்ற வரிகளைப் போல் தனது தாயே தனக்கு மகளாய் வந்து பிறந்திருக்கிறார் என நினைத்து மிகுந்த உற்சாகம் அடைகிறார் யுவன். இந்த தருணம் யுவனின் வாழ்க்கையில் நடந்த ஒரு மேஜிக் என்றே சொல்லலாம்.
இதையும் படியுங்கள்... கம்பேக் கொடுத்தாரா விக்ரம்..! சியானின் ‘கோப்ரா’ சாதித்ததா?... சோதித்ததா? - விமர்சனம் இதோ