லேட்டா ரிலீஸ் ஆனாலும் வசூலில் எம்புரானை ஓவர்டேக் செய்த வீர தீர சூரன் பாகம் 2!
மோகன்லாலின் எம்புரான் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆன விக்ரமின் வீர தீர சூரன் பாகம் 2 திரைப்படத்தின் முதல் நாள் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை பார்க்கலாம்.

Veera Dheera Soora Part 2 Day 1 Box Office Collection : சியான் விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் வீர தீர சூரன் பாகம் 2. இப்படத்தை எஸ்.யு.அருண்குமார் இயக்கி உள்ளார். சித்தா படத்தின் வெற்றிக்கு பின் அவர் இயக்கிய படம் இது என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படத்தின் ரிசல்டும் அமைந்துள்ளது. வீர தீர சூரன் பாகம் 2 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. சியான் விக்ரமுக்கு இது கம்பேக் படமாக அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
லேட்டாக ரிலீஸ் ஆன வீர தீர சூரன் பாகம் 2
வீர தீர சூரன் பாகம் 2 படத்திற்கு காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி கொடுக்கப்பட்டிருந்த போதிலும், நிதிப்பிரச்சனை காரணமாக இப்படத்தின் ரிலீசுக்கு திடீர் தடைவிதிக்கப்பட்டது. பின்னர் அந்த பிரச்சனையை மாலைக்குள் முடித்துவைத்து, இதன் முதல் காட்சியை மாலை 6 மணிக்கு தான் திரையிட்டனர். லேட்டாக ரிலீஸ் ஆனாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை அளித்தனர். நேற்று இப்படத்திற்கு இரண்டு ஷோ மட்டுமே திரையிடப்பட்டாலும் அது பெரும்பாலும் ஹவுஸ்புல் காட்சிகளாகவே இருந்தன.
இதையும் படியுங்கள்... சியான் விக்ரம் நடிப்பில் வெளியான 'வீர தீர சூரன் 2' சூப்பரா? சுமாரா? ட்விட்டர் விமர்சனம்!
பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன?
வீர தீர சூரன் பாகம் 2 திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் 370 தியேட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. அதில் மொத்தம் 945 காட்சிகள் திரையிடப்பட்டன. அதன் வாயிலாக இப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.2 கோடியே 4 லட்சத்து 18 ஆயிரம் வசூலித்து உள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னை - செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் இப்படம் ரூ.74 லட்சத்து 83 ஆயிரம் வசூலித்து இருக்கிறது. அடுத்ததாக கோவையில் 33 லட்சமும், மதுரை - ராமநாதபுரம் ஏரியாவில் 27 லட்சமும், திருச்சி - தஞ்சாவூரில் 19 லட்சமும் வசூலித்துள்ளது.
எம்புரானை மிஞ்சிய வீர தீர சூரன் பாகம் 2
வீர தீர சூரன் பாகம் இரண்டு திரைப்படத்திற்கு போட்டியாக தமிழ்நாட்டில் மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படமும் ரிலீஸ் ஆகி இருந்தது. இப்படம் தமிழ்நாட்டில் 200 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி இருந்தது. இப்படத்திற்கு மொத்தம் 1269 காட்சிகள் திரையிடப்பட்டன. இதன் வாயிலாக ரூ.1 கோடியே 94 லட்சத்து 48 ஆயிரம் வசூலித்து இருந்தது. வீர தீர சூரன் காலையில் ரிலீஸ் ஆகாததால், அப்படம் பார்க்க வந்த கூட்டம் பெரும்பாலும் எம்புரான் படத்துக்கு சென்றுவிட்டது. இதனால் காலை மற்றும் மதிய காட்சிகளில் இப்படத்திற்கு நல்ல வசூல் கிடைத்தது. இருப்பினும் வீர தீர சூரன் பாகம் 2 திரைப்படம் நேற்று மாலை வெளியாகி தமிழ்நாட்டில் எம்புரான் படத்தைவிட அதிகம் வசூலித்துள்ளது.
இதையும் படியுங்கள்... வீர தீர சூரன் vs எம்புரான் : வெற்றியை தட்டிதூக்கப்போவது யார்? பிரபல நடிகர் பளீச் பதில்