- Home
- Cinema
- “போனை கீழ வையுடா, இல்லேன்னா அடிச்சுருவேன்”... பாட்டு கேட்ட தயாரிப்பாளரிடம் எரிமலைபோல் பொங்கிய வாலி
“போனை கீழ வையுடா, இல்லேன்னா அடிச்சுருவேன்”... பாட்டு கேட்ட தயாரிப்பாளரிடம் எரிமலைபோல் பொங்கிய வாலி
கவிஞர் வாலி அன்னமிட்ட கை படத்தின் தயாரிப்பாளரை போனில் திட்டிய சம்பவம் பற்றியும், அவரின் கோபத்திற்கு பின்னால் இருந்த நியாயத்தால் எம்ஜிஆரே அவரை சந்தித்து சமாதானப்படுத்தியது பற்றியும் பார்க்கலாம்.

Lyricist Vaali
தமிழ் திரைப்பட வரலாற்றில் நீண்டகாலம் அழியாத தடம் பதித்தவர் வாலிபக் கவிஞர் வாலி. அரை நூற்றாண்டுக்கும் மேலாக எண்ணற்ற சூப்பர் ஹிட் பாடல்களை எழுதி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். வாலிக்கு மிக நெருங்கிய நண்பராக எம்ஜிஆர் இருந்து வந்தார். அவருக்கு வாலி எந்த பாடல் எழுதினாலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இதனால் தன்னுடைய படங்களில் தொடர்ச்சியாக வாலியை பயன்படுத்தி வந்தார் எம்ஜிஆர். இவர்களுக்குள் சில சமயங்களில் மோதல்களும் நடந்திருக்கின்றன.
வாலிக்கு வந்த வாய்ப்பு
அப்படி வாலியின் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத ஒரு சம்பவத்தை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம். எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “அன்னமிட்ட கை” படத்தை தயாரித்தவர் தயாரிப்பாளர் சிவசாமி. அப்படத்தின் இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன், கம்போசிங்கிற்காக படக்குழுவுடன் அமர்ந்திருந்தார். உடனே வாலியை அழைத்து, “இன்றே பாடலை எழுதித் தாருங்கள்; நாளை ரெக்கார்டிங் முடித்து மறுநாள் தேவிக்குளத்தில் ஷூட்டிங். அவசரமா வேண்டும்” என்று கேட்டாராம்.
தயாரிப்பாளரின் பேச்சால் டென்ஷன் ஆன வாலி
அப்போது வாலி ஒரு கடினமான சூழலில் இருந்தாராம். அவரின் மனைவிக்கு அந்த நேரத்தில் பிரசவ வலி வந்ததால் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருந்தது. அந்த பதட்டத்துடன் அவர், “இப்போ பாடல் எழுத முடியாது; வேறு ஒருவரிடம் வாங்கிக்கோங்க” என்று சொன்னபோது, அந்த தயாரிப்பாளர் சிரித்துவிட்டு நக்கலாக, “ஆபரேஷன் நீங்களா பண்ணப் போறீங்க?” என கேட்டுவிட்டாராம்.
அந்த ஒரு சொல் வாலியை ரொம்பக் கோபப்படுத்தியது. உடனே அவர் தொலைபேசியில், “போனை கீழே வைடா, இல்லேன்னா அடிச்சு ஒதச்சிடுவேன்!” என்று சொல்லி போனை வைத்துவிட்டாராம்.
சமாதானப்படுத்திய எம்ஜிஆர்
அடுத்த நாள், எம்.ஜி.ஆர் நேரடியாக வாலியை அழைத்து, “உங்க கோபம் நியாயம் தான். அந்த விஷயம் மறந்துருங்க. பாடலையும் பின்னாடி வாங்கிக்கறேன்” என்றாராம். பிறகு அவர் வாலி குடும்பத்தை மருத்துவமனைக்கே வந்து பார்த்து, புதிதாக பிறந்த குழந்தைக்காக ஒரு பவுன் தங்கத்தை கொடுத்து விட்டு சென்றாராம். இரண்டு நாள்களுக்கு பிறகு பாடல் தந்தால் போதும் என சொன்னாராம்.
அந்த சம்பவத்துக்குப் பிறகு, எம்.ஜி.ஆர் மீது வாலிக்கு மரியாதை இன்னும் உயர்ந்தது. இருவரும் இணைந்து பல வெற்றிப் பாடல்களையும் காலத்தால் அழியாத படைப்புகளையும் தந்தனர்.