உதயநிதிக்கு மீண்டும் சினிமா ஆசையை தூண்டிவிடும் மாமன்னன்... ஓடிடி உரிமை மட்டும் இத்தனை கோடிக்கு விற்பனையா?
மாமன்னன் படத்தின் பிசினஸ் படுஜோராக நடந்து வருவதால், உதயநிதிக்கு மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசை துளிர்விட்டு உள்ளதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனான உதயநிதி, சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் விஜய், சிம்பு, கமல், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வந்தார். இதையடுத்து ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமான உதயநிதி அப்படம் ஹிட் ஆனதும், முழுநேர நடிகராக மாறி தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.
இதனிடையே கடந்த ஆண்டு திடீரென உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து அரசியலில் பிசி ஆனதன் காரணமாக சினிமாவுக்கு டாடா காட்டிவிட்டு சென்றார் உதயநிதி. இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை எனவும், மாமன்னன் தான் தனது கடைசி படம் என்றும் அறிவித்தார் உதயநிதி. அதுமட்டுமின்றி அமைச்சர் ஆனதன் காரணமாக கமல் தயாரிப்பில் நடிக்க இருந்த படத்தில் இருந்தும் அதிரடியாக விலகினார்.
இதையும் படியுங்கள்... ஆர்.ஆர்.ஆர் முதல் தி வேல் வரை... ஆஸ்கர் விருது வென்ற படங்களை எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்? - முழு விவரம் இதோ
தற்போது உதயநிதி நடித்து கண்ணை நம்பாதே என்கிற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் வருகிற மார்ச் 17-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதையடுத்து அவர் நடித்த மாமன்னன் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை வருகிற ஜூன் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
இந்நிலையில், மாமன்னன் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.23 கோடிக்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உதயநிதியின் கெரியரில் இதுவரை இவ்வளவு பெரிய தொகைக்கு எந்த படமும் விற்கப்படவில்லையாம். நெட்பிளிக்ஸ் இவ்வளவு தொகை கொடுத்து வாங்கியதற்கு மாரி செல்வராஜ் தான் முக்கிய காரணம் எனவும் கூறப்படுகிறது.
இதற்கு முன் அவர் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றிபெற்றதால் தான் மாமன்னன் படத்தை இந்த அளவுக்கு விற்பனையாகி உள்ளதாம். மாமன்னன் படத்தின் பிசினஸ் படுஜோராக நடந்து வருவதால், உதயநிதிக்கு மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசை துளிர்விட்டு உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இதையும் படியுங்கள்... ஜோதிகாவை விரட்டி விரட்டி காதலித்த வாரிசு நடிகர்..! சூர்யாவால் கைகூடாமல் போன லவ்!