- Home
- Cinema
- விடுமுறை நாளிலும் கூட்டமில்லை; தக் லைஃப் சோலி முடிஞ்சது - 3 நாட்களில் இம்புட்டு தான் வசூலா?
விடுமுறை நாளிலும் கூட்டமில்லை; தக் லைஃப் சோலி முடிஞ்சது - 3 நாட்களில் இம்புட்டு தான் வசூலா?
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படம் 3 நாட்களில் எவ்வளவு வசூலித்து உள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Thug Life Movie Box Office Collection Day 3
கமல் ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியானது. இருப்பினும், பாக்ஸ் ஆபிஸில் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. படம் தொடக்க நாளில் நல்ல வசூலைப் பெற்றது, ஆனால் பின்னர் வசூல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதற்கிடையில், தக் லைஃப் படத்தின் மூன்றாம் நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன, இது அதிர்ச்சியளிக்கிறது. இந்தப் படம் தமிழைக் காட்டிலும் தெலுங்கு மற்றும் இந்தியில் படு மோசமாக வசூலித்து வருகிறது.
கமல் - மணிரத்னம் கூட்டணி
சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் ஹாசன் மற்றும் மணிரத்னம் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இருவரும் கடைசியாக நாயகன் படத்தில் இணைந்து பணியாற்றினர். தக் லைஃப் ஒரு கேங்ஸ்டர் படம், இதில் கமல் ஹாசனுடன் சிம்பு, திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லெட்சுமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மொழி சர்ச்சைகள் மற்றும் பல்வேறு எதிர்ப்புகளுக்குப் பிறகு, கமல் ஹாசனின் தக் லைஃப் படம் ஜூன் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
தக் லைஃப் வசூல்
இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. பார்வையாளர்கள் சமூக ஊடகங்களில் படத்தை கடுமையாக ட்ரோல் செய்து வருகிறார்கள். இப்படி ஒரு படத்தை கொடுத்ததற்காக இயக்குனர் மணிரத்னமும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். படம் தொடக்க நாளில் ரூ.15.5 கோடி வசூலித்தது, இது வர்த்தக நிபுணர்களால் நல்ல வரவேற்பாகக் கருதப்பட்டது. ஆனால் இரண்டாம் நாளில், படத்தின் வசூல் முதல் நாளை விட பாதியாகக் குறைந்து ரூ.7.15 கோடியாக இருந்தது.
3ம் நாளில் தக் லைஃப் கலெக்ஷன் எவ்வளவு?
மூன்றாம் நாளான நேற்று பக்ரீத் விடுமுறை தினம் என்பதால் தக் லைஃப் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றும் படத்தின் வசூல் மிக மந்தமாகவே இருந்தது, இப்படம் மூன்றாம் நாளில் இந்தியாவில் வெறும் ரூ.7.50 கோடி மட்டுமே வசூலித்தது. இதன் மூலம், இந்திய பாக்ஸ் ஆபிஸில் மூன்று நாட்களில் இப்படம் ரூ.30.15 கோடி வசூலித்துள்ளது. நேற்று தமிழ்நாட்டில் மட்டும் தக் லைஃப் திரைப்படம் ரூ.6.2 கோடி வசூலித்து இருந்தது. இயக்குனர் மணிரத்னம் தக் லைஃப் படத்தை ரூ.250-300 கோடி செலவில் உருவாக்கியுள்ளார். படத்தின் வசூல் வேகத்தை பார்க்கும் போது, போட்ட பட்ஜெட் கூட வருவது கடினம் என்று கூறப்படுகிறது.