Thug Life : தியேட்டரில் கூட்டமில்லை; 6ம் நாளிலேயே வசூலில் வாஷ் அவுட் ஆன தக் லைஃப்!
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படம் வசூலில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அப்படத்தின் 6ம் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

Thug Life Box Office Collection
நாயகன் என்கிற மாஸ்டர் பீஸ் படத்தை கொடுத்த நடிகர் கமல்ஹாசன் - இயக்குனர் மணிரத்னம் கூட்டணி, 37 ஆண்டுகளுக்கு பின் இணைந்து பணியாற்றிய படம் தக் லைஃப். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவீஸும் தயாரித்து இருந்தது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த தக் லைஃப் படத்திற்கு ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்திற்கு படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத் பணியாற்றி இருந்தார்.
ட்ரோல் செய்யப்படும் தக் லைஃப்
கமல் - மணிரத்னம் காம்போ என்றவும் நாயகன் ரேஞ்சுக்கு ஒரு கேங்ஸ்டர் படத்தை எதிர்பார்த்து தக் லைஃப் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. நாயகன் ஏற்படுத்திய தாக்கத்தை துளிகூட தக் லைஃப் ஏற்படுத்தாததால் அதனை ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். இப்படத்தில் கமலுடன், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர் என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்திருந்தும், இப்படம் ரசிகர்களை கவரவில்லை. இதனால் நெட்டிசன்கள் தக் லைஃப் படத்தை சரமாரியாக விமர்சித்தும் ட்ரோல் செய்தும் வருகிறார்கள்.
தக் லைஃப் வசூல்
தக் லைஃப் திரைப்படம் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருந்தது. இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் ரிசல்ட் எதிர்பார்த்தபடி அமையாததால், தக் லைஃப் படத்தின் வசூலும் கடும் சரிவை சந்தித்தது. முதல் நாளில் வெறும் 30 கோடி வசூலித்த இப்படம், அடுத்தடுத்த நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் மேலும் சரிவை சந்தித்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில், 6ம் நாளான நேற்று இப்படம் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை பார்க்கலாம்.
தக் லைஃப் 6ம் நாள் வசூல் நிலவரம்
தக் லைஃப் திரைப்படம் 6ம் நாளில் இந்தியாவில் வெறும் ரூ.1.75 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.1.52 கோடி வசூலித்து இருக்கிறது. இது கடந்த மாதம் வெளிவந்த சூரியின் மாமன், சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி போன்ற சிறிய பட்ஜெட் படங்களின் 6ம் நாள் வசூலை விட கம்மியாகும். டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் 6ம் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 2.07 கோடி வசூலித்திருந்தது. அதேபோல் சூரியின் மாமன் திரைப்படம் ரிலீஸ் ஆன 6ம் நாளில் தமிழ்நாட்டில் ரூ.1.70 கோடி வசூலித்திருந்தது. இந்த படங்களைக் காட்டிலும் தக் லைஃப் மிக கம்மியாக வசூலித்துள்ளது.