மணிரத்னத்துடன் அதிகம் பேசாமல் இருக்க காரணம் இதுதான் - உண்மையை உடைத்த ஏ.ஆர்.ரகுமான்
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் ‘தக் லைஃப்’ பட இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமலஹாசன் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

A.R Rahman About Maniratnam Friendship
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், இயக்குனர் மணிரத்னத்துடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கமலஹாசன் கதாநாயகனாக நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தை மணிரத்னம் இயக்கும் நிலையில், அந்தப் படத்தில் இசையமைப்பாளராக ஏ.ஆர் ரகுமான் இணைந்திருந்தார்.
30 ஆண்டுகால நட்பு
‘தக் லைஃப்’ திரைப்படம் அடுத்த மாதம் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஏ.ஆர் ரகுமான் தான் ஏன் குறைவாக பேசுகிறேன் என்பது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். மேலும் மணிரத்னம் மற்றும் கமலஹாசன் ஆகியோருடனான தனது நட்பு குறித்தும் அவர் விரிவாக கூறியுள்ளார்.
ரமலான் மாதம் கற்றுக் கொடுத்த பழக்கம்
நாங்கள் எப்போதும் வேலையிலேயே அதிகம் கவனம் செலுத்துகிறோம். அதன் பொருள் நாங்கள் புறம் பேசுவதையோ அல்லது கிசுகிசுப்பதையோ விரும்புவதில்லை. வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். அடிப்படையில் இந்த பழக்கத்தை ரமலான் காலத்திலேயே கற்றுக் கொண்டேன். அந்த மாதத்தில் நீங்கள் யாரைப் பற்றியும் தவறாக பேசக்கூடாது. எனவே ஒவ்வொரு வருடமும் அந்த பழக்கம் எனக்குள் மீண்டும் மீண்டும் புகுத்தப்பட்டு விட்டது. தற்போது அது என்னுடைய ஒரு பகுதியாகவே ஆகிவிட்டது என்றார்.
மணிரத்னத்துடன் அதிகம் பேசாமல் இருக்க காரணம்
அதேபோல் மணிரத்னத்துடன் நான் அதிகம் பேசுவதில்லை. குறைவாக பேசினாலும் அது பெரும்பாலும் திரைப்படங்களை பற்றியதாகவே இருக்கும். நாங்கள் ஒன்றாக காட்சிகளை பார்ப்போம். எங்கள் உரையாடல்கள் மிகக் குறுகியதாக இருக்கும். இதை மாற்ற முடியுமா? இது நன்றாக இருக்கிறதா? போன்ற விஷயங்களை மட்டுமே நாங்கள் பேசிக் கொள்வோம். நான் ஒலிக்கலவை அல்லது புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் பொழுது அவர் இதையெல்லாம் செய்ய உங்களுக்கு எங்கிருந்து நேரம் இருக்கிறது என்று கேட்டுக்கொண்டே இருப்பார் என்று மணிரத்னம் குறித்து ஏ.ஆர். ரகுமான் பேசினார்.
அதிக எதிர்பார்பில் ரசிகர்கள்
‘தக் லைஃப்’ திரைப்படம் மணிரத்தினம் இயக்கத்தில், கமலஹாசன் திரைக்கதையில் உருவாகி உள்ள திரைப்படமாகும். இந்த படத்தில் சிம்பு, திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், நாசர், அலிஃபசல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் மூவிஸ் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தப் படத்தை தயாரித்துள்ளன. ‘நாயகன்’ படத்திற்குப் பிறகு கமலஹாசனும், மணிரத்னமும் மீண்டும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.