மதுரை குலுங்கப்போகுது; 14 வருடத்திற்கு பின் தூங்காநகரத்துக்கு விசிட் அடிக்கும் விஜய்
நடிகர் விஜய் 14 ஆண்டுகளுக்கு பின் மதுரைக்கு வர உள்ளதால் அவரை வரவேற்க தமிழக வெற்றிக் கழகத்தினர் தடபுடலாக ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

TVK Head Vijay Visit Madurai After 14 Years : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை கடந்த ஆண்டு தொடங்கினார். அக்கட்சி வெற்றிகரமாக ஓராண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை டார்கெட் செய்து களமிறங்கி உள்ள விஜய், முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதால், இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் அறிவித்து உள்ளார்.
ஜன நாயகன்
விஜய்யின் கடைசி படம் ஜன நாயகன்
நடிகர் விஜய்யின் கடைசி படமாக ஜன நாயகன் உருவாகி வருகிறது. இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன், மமிதா பைஜு, பிரியாமணி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திற்காக நடிகர் விஜய் ரூ.275 கோடி சம்பளமாக வாங்கி உள்ளார். இப்படம் வருகிற 2026-ம் ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு திரைக்கு வர உள்ளது.
விஜய்
மதுரைக்கு வரும் விஜய்
ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற உள்ளது. இதற்காக இன்று மாலை 4 மணியளவில் மதுரைக்கு விமான மூலம் வருகிறார் விஜய். பின்னர் அங்கிருந்து கொடைக்கானல் செல்ல உள்ளார். நடிகர் விஜய் மதுரை வர உள்ளதால் அவரை வரவேற்க மதுரை விமான நிலையத்தில் அதிகளவில் ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
தவெக தலைவர் விஜய்
விஜய்யை வரவேற்க குவியும் ரசிகர்கள்
விஜய் மாலை 4 மணிக்கு தான் வர உள்ளார். ஆனால் இன்று காலை 7 மணிக்கு அவர் வர இருப்பதாக தவறான தகவல் பரவியதை நம்பி, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மதுரை விமான நிலையத்தில் குவிந்தனர். இதனால் மதுரை விமான நிலையம் தவெக-வினரால் நிரம்பி வழிகிறது. சுமார் 14 ஆண்டுகளுக்கு பின் நடிகர் விஜய் மதுரை வர உள்ளதால் அவரை காண ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். கோவையை போல் மதுரையும் இன்று மாலை குலுங்கப்போகிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.