தலைதூக்கிய கொரோனா... 'தலைவி' படக்குழு எடுத்த அதிரடி முடிவு!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள, 'தலைவி' திரைப்படம் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், மீண்டும் கொரோனா பிரச்சனை தலை தூக்கியுள்ளதால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
மறைந்த பழம்பெரும் நடிகையும், தமிழக அரசியல் களத்தில் சிங்க பெண்ணாக ஆட்சி செய்த, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க, பல இயக்குனர்கள் போட்டி போட்ட நிலையில், இயக்குனர் கெளதம் மேனன் வெப் சீரிஸாக இயக்கி வெளியிட்டிருந்தார்.
ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்த இந்த வெப் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது இயக்குனர் ஏ.எல்.விஜய் 'தலைவி' என்கிற பெயரில் படமாக இயக்கியுள்ளார்.
இந்த படத்தில், நடிகை பாலிவுட் நாயகி கங்கனா ரணாவத் நாயகியாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மாதம் 'தலைவி' படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
'தலைவி' படத்தின் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்தது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருகாகியுள்ள இந்த படத்தை, கொரோனா இரண்டாவது அலைக்கு இடையேயும், 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையிலும், வெளியிட்டால்... போட்ட பணத்தை கூட எடுக்க முடியாது என்பதால் படக்குழு அதிரடி முடிவெடுத்துள்ளது.
அதாவது படத்தை தற்போது வெளியிடும் யோசனையில் இருந்து பின் வாங்கியுள்ளது. எனவே ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாக இருந்த தலைவி படம் அன்று ரிலீஸ் ஆகாது என்று அறிவித்துள்ளது. எனவே கொரோனா பிரச்சனைகள் சற்று தணிந்த பின், புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.