- Home
- Cinema
- படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் இவங்க பேரரசி தான்; கோடீஸ்வரியாக வாழும் நித்யா மேனன் சொத்து மதிப்பு இதோ
படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் இவங்க பேரரசி தான்; கோடீஸ்வரியாக வாழும் நித்யா மேனன் சொத்து மதிப்பு இதோ
தலைவன் தலைவி திரைப்படத்தில் பேரரசியாக நடித்துள்ள நடிகை நித்யா மேனனின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Nithya Menen Net Worth
எந்தவித ரோல் கொடுத்தாலும் அதற்கு கச்சிதமாக பொருந்தக்கூடிய நடிகைகளில் நித்யா மேனனும் ஒருவர். இவர் குழந்தைப் பருவத்தில் இருந்தே மலையாள படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2008-ம் ஆண்டு வெளிவந்த ஆகாஷ கோபுரம் என்கிற மலையாள படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நித்யா. இதையடுத்து கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்த இவர் கடந்த 2011-ம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அந்த ஆண்டு வெளியான வெப்பம் திரைப்படத்தில் நடிகர் நானிக்கு ஜோடியாக நடித்திருந்தார் நித்யா மேனன். அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
நித்யா மேனன் திரைப்பயணம்
நடிகை நித்யா மேனனுக்கு தமிழில் திருப்புமுனை தந்த படம் என்றால் அது காஞ்சனா 2 தான். ராகவா லாரன்ஸ் இயக்கிய இப்படத்தில் கங்கா என்கிற மாற்றுத்திறனாளி பெண்ணாக நடித்திருந்தார் நித்யா. அந்த கேரக்டர் தான் தன்னுடைய கெரியரிலேயே சவாலான கேரக்டராக இருந்தது என சமீபத்திய பேட்டியில் கூட கூறி இருந்தார். இதையடுத்து மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் தாரா என்கிற கேரக்டரில் நடித்திருந்தார். இப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்தார் நித்யா. அவர்கள் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி வேறலெவலில் ஒர்க் அவுட் ஆகி இருந்தது.
நித்யா மேனனுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு
காஞ்சனா 2 படத்தில் நித்யா மேனனின் நடிப்பை பார்த்து அவருக்கு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பும் கிடைத்தது. அப்படி தான் அவர் சூர்யாவுக்கு ஜோடியாக 24 திரைப்படத்தில் பிரியா சேதுராமன் கேரக்டரில் நடித்தார். இதையடுத்து அட்லீ இயக்கிய மெர்சல் திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் மனைவியாக நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களிலும் நித்யா மேனன் குறைந்த அளவிலான காட்சிகளில் வந்தாலும் அதில் தன்னுடைய நடிப்பால் ஸ்கோர் செய்திருப்பார். மெர்சல் படத்துக்கு பின்னர் மிஷ்கின் இயக்கிய சைக்கோ திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்தார் நித்யா.
நித்யாவுக்கு தேசிய விருது வாங்கித்தந்த தமிழ் படம்
நடிகை நித்யா மேனன் இதுவரை இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்திருந்தாலும் அவருக்கு முதன்முதலில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றது திருச்சிற்றம்பலம் என்கிற தமிழ் படத்திற்காக தான். அப்படத்தில் ஷோபனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்று சொல்வதை விட வாழ்ந்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அந்த கேரக்டர் மக்கள் மத்தியில் ரீச் ஆனது. திருச்சிற்றம்பலம், படத்தின் வெற்றிக்கு பின்னர் காதலிக்க நேரமில்லை படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்தார். அப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தற்போது திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி அமோக வரவேற்பை பெற்று வரும் தலைவன் தலைவி படத்தில் பேரரசி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்று வருகிறார் நித்யா மேனன்.
நித்யா மேனன் சொத்து மதிப்பு
இந்த நிலையில் நடிகை நித்யா மேனனி சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி அவரின் சொத்து மதிப்பு ரூ.50 முதல் 55 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ.3 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம். இவர் நடிப்பில் அடுத்ததால் இட்லி கடை என்கிற திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை தனுஷ் இயக்கி உள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக தான் நித்யா மேனன் நடித்துள்ளார். இப்படம், வருகிற அக்டோபர் 1ந் தேதி திரைக்கு வர உள்ளது. திருச்சிற்றம்பலம் படத்துக்கு பின்னர் தனுஷும் நித்யா மேனனும் இணைந்து நடித்துள்ள படம் என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.