- Home
- Cinema
- ‘ஆசியாவின் ஆஸ்கார்’ விருதை தட்டிச் சென்ற ஆர். கெளதம்... தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த இளம் இயக்குநர்!
‘ஆசியாவின் ஆஸ்கார்’ விருதை தட்டிச் சென்ற ஆர். கெளதம்... தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த இளம் இயக்குநர்!
R Gowtham Wins Asia's Oscar Award : ‘மெம்பர்ஸ் ஆப் தி பிராப்லமடிக் பேமிலி’ படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை இயக்குநர் ஆர். கெளதம் வென்றுள்ளார்.

ஆசியா பசிபிக் ஸ்கிரீன் அவார்ட்ஸ்
ஆசியா, பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களுக்காக வழங்கப்படும் ஆசியா பசிபிக் ஸ்கிரீன் அவார்ட்ஸ் (APSA) விருதுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இயக்குநர் ஆர். கெளதம் சாதனை படைத்துள்ளார். இவரது அறிமுகத் திரைப்படமான ‘மெம்பர்ஸ் ஆப் தி பிராப்லமடிக் பேமிலி’ படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநருக்கான யங் சினிமா விருதை அவர் வென்றுள்ளார்.
ஆசியாவின் முக்கியமான திரைப்பட விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் APSA விருதுகள், ஆசியா, பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த 78 நாடுகளில் உருவாகும் திரைப்படங்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. உலக அளவில் கவனம் பெற்ற இயக்குநர்களான ஜாபர் பனாஹி, மஜீத் மஜிதி, நூரி பில்ஜ் சிலான், அனுராக் கஷ்யப், ரீமா தாஸ் உள்ளிட்ட பலரும் கடந்த காலங்களில் இந்த விருதுகளை வென்றுள்ளனர்.
அறிமுகப் படத்திலேயே சர்வதேச விருது
இந்த ஆண்டுக்கான விருது அறிவிப்பை APSA அமைப்பு தனது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இதில், ‘மெம்பர்ஸ் ஆப் தி பிராப்லமடிக் பேமிலி’ திரைப்படத்தை இயக்கிய ஆர். கெளதம், சிறந்த அறிமுக இயக்குநருக்கான Young Cinema Award விருதைத் தட்டிச் சென்றுள்ளார்.
இதன் மூலம் இந்தப் பிரிவில் விருது பெறும் முதல் தமிழ் திரைப்பட இயக்குநர் என்ற பெருமையையும் கெளதம் பெற்றுள்ளார். அவரது இந்த சர்வதேச சாதனைக்கு இயக்குநர்கள் வெற்றிமாறன், பா. ரஞ்சித், அனுராக் கஷ்யப், பிரசாத் முருகேசன், பிரம்மா உள்ளிட்ட திரையுலகினர் மற்றும் நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பெர்லின் திரைப்பட விழாவிலும் தேர்வு
கெளதம் இயக்கியுள்ள ‘மெம்பர்ஸ் ஆப் தி பிராப்லமடிக் பேமிலி’ திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இருப்பினும், வெளியீட்டுக்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் கவனம் பெற்றுள்ளது.
கடந்த 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் தேர்வாகி ஜெர்மனியில் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவிலும் படம் திரையிடப்பட்டது. தற்போது நடைபெற உள்ள தர்மசாலா சர்வதேச திரைப்பட விழாவிற்கும் இப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
முன்னணி கதாபாத்திரத்தில் ‘கூழாங்கல்’ நடிகர்
இந்தப் படத்தில் ‘கூழாங்கல்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற கறுத்தடையான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ஆரா அஜித், யுவஸ்ரீ, அறிமுக நடிகர்களான காஞ்சனா, டிபிஎஸ் பன்னீர்செல்வம், சரவண சித்தார்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை சித்தார்த் கதிரும், படத்தொகுப்பை கணேஷ் நந்தக்குமாரும் கவனித்துள்ளனர். அலெக்ஸாண்டர் தமிழ் தம்பி கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
சுயாதீன தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அங்கீகாரம்
லேபிரிந்த் நரேட்டிவ்ஸ் நிறுவனம் சார்பில் தமிழரசன் காளிதாஸ் இப்படத்தை தயாரித்துள்ளார். பொட்டெட்டோ ஈட்டர்ஸ் கலக்டிவ் நிறுவனத்தின் முகேஷ் சுப்பிரமணியம் இணைத் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த விருது குறித்து தயாரிப்பாளர் தமிழரசன் காளிதாஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தமிழ் சுயாதீனத் திரைப்படங்களுக்கு சர்வதேச அளவில் கவனம் அதிகரித்து வருவதற்கு இந்த அங்கீகாரம் முக்கியமானதாக இருக்கும் என்றும், உலக திரைப்பட விழாக்களில் தமிழ் சுயாதீனப் படங்களை ஆர்வத்துடன் கவனிக்கும் சூழல் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

