வாடகை தாய் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி..! ஆதாரங்களை சமர்ப்பித்து நயன்தாரா - விக்னேஷ் சிவன் விளக்கம்!
நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவனின் வாடகை தாய் விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கான ஆதாரங்களை விசாரணை குழுவிடம் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி சமர்ப்பித்து, இது குறித்து விளக்கம் அளித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி இருவருக்கும் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இதில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, திரை உலகச் செய்த பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிகை நயன்தாரா நடித்துவரும் நிலையில், இவர் பட வாய்ப்புகளை குறைத்துக் கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளதாக சில தகவல்கள் பரவியது. இந்நிலையில் கடந்த வாரம், நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தாங்கள் பெற்றோர் ஆகிவிட்டதாக இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.
இவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட கொண்டது உறுதி செய்யப்பட்டது. எனினும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் முறை, இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறி குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால், அவர்களுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து இருக்க வேண்டும். மேலும் கணவன் மனைவி இருவரில் ஒருவருக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் ஏதேனும் பிரச்சனைகள் இருக்க வேண்டும் என்றும் இதற்கான சில விதிமுறைகள் உள்ளது என கூறப்பட்டது.
திருமணம் ஆன 4 மாதத்திலேயே இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொண்டுள்ளதால், தடையை மீறி செயல்பட்டதாக பல தகவல்கள் பரவியது. மேலும் இது குறித்து விசாரிக்க தமிழக அரசு சார்பில் விசாரணை குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. ஒருவேளை இவர்கள், தடையை மீறி செயல்பட்டிருந்தால் சிறை செல்லவும் வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.
இவர்கள் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் விசாரணை செய்யப்பட்டதை தொடர்ந்து, நயன்தாரா - விக்னேஷ் சிவனிடமும் விசாரணை நடந்துள்ளது. அப்போது இவர்கள் விசாரணை குழுவிடம் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் கடந்த டிசம்பர் மாதமே வாடகை தாய்முறையில் குழந்தை பெறும் முறை ஒப்பந்த பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கூறி வாடகை தாய் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் என்பது குறிபிடித்தக்கது.