ஆஸ்கர் ரேஸில் அடுத்த கட்டத்திற்கு சென்ற ஜெய் பீம்.. எட்டாக் கனியாக இருக்கும் ஆஸ்கரை தட்டித் தூக்குவாரா சூர்யா?
ஆஸ்கர் விருதுக்கான போட்டியிலும் ஜெய் பீம் திரைப்படம் அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளது. அதன்படி ஆஸ்கர் விருதுகான போட்டியில் உலகெங்கிலும் இருந்து 276 படங்கள் தேர்வாகி உள்ளன.
உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது உண்டு. அந்த வகையில் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'ஜெய்பீம்'. கடந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியான இந்த திரைப்படம் மொழி, இனம், கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.
இந்த திரைப்படம் 1990களில் நடந்த உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மீது செய்யாத தவறுக்காக காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களை தோலுரிக்கும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது. இதில் பாதிக்கப்பட்ட செங்கேணிக்கு (பார்வதி அம்மாள்) நீதி கிடைக்க சட்ட ரீதியாக போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார்.
பல்வேறு தடைகளை கடந்து சாதித்த ஜெய் பீம் படத்துக்கு உலகெங்கிலும் இருந்து விருதுகளும், அங்கீகாரமும் கிடைத்து வருகிறது. சமீபத்தில் ஆஸ்கர் யூடியூப் தளத்தில் ஜெய் பீம் பட காட்சி இடம்பெற்று வரலாறு படைத்தது.
தற்போது ஆஸ்கர் விருதுக்கான போட்டியிலும் ஜெய் பீம் திரைப்படம் அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளது. அதன்படி ஆஸ்கர் விருதுகான போட்டியில் உலகெங்கிலும் இருந்து 276 படங்கள் தேர்வாகி உள்ளன. அதில் சூர்யாவின் ஜெய் பீம் மற்றும் மோகன்லாலின் மரைக்காயர் ஆகிய 2 இந்திய படங்கள் இடம்பெற்று உள்ளன. இதில் சிறந்த நடிகர் பிரிவுக்கான போட்டியில் சூர்யாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
கடந்தாண்டு இதேபோல் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான போட்டியின் இறுதி பட்டியல் வரை சென்று வந்தது குறிப்பிடத்தக்கது. சூரரைப் போற்று விருது வாய்ப்பை நழுவ விட்டாலும், ஜெய் பீம் அதனை வெல்லும் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.