தளர்வுகள் அறிவிச்சும் ரிலீஸ் பண்ண முடியாம தவிக்கும் சூர்யா! எதற்கும் துணிந்தவன் படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா?
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் எதற்கும் துணிந்தவன் படம் ரிலீசாவதில் சிக்கல் நீடிக்கிறதாம்.
தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம்வருபவர் பாண்டிராஜ். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் நடிகர் சூர்யா (suriya) ஹீரோவாக நடித்துள்ளார். ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில் நடித்த சூர்யா தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார்.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் திவ்யா துரைசாமி, தேவதர்சினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வினய் வில்லனாகவும், நடிகர் சூரி நகைச்சுவை வேடத்திலும் நடித்திருக்கின்றார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். தமிழில் தயாராகி உள்ள இப்படத்தை தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.
எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படம் பிப்ரவரி மாதம் 4-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய சூழலில் இப்படம் திட்டமிட்டபடி ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்கிற கட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கிறது.
இவ்வாறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் இப்படம் அடுத்த சில வாரங்களுக்கு ரிலீசாக வாய்ப்பில்லையாம். ஏனெனில் இப்படத்தை பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டுமே தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தொடர்கிறது. அங்கு எப்போது தளர்வுகள் அறிவிக்கப்படுகிறதோ, அப்போது தான் எதற்கும் துணிந்தவன் படத்தை ரிலீஸ் செய்ய முடியுமாம். இதனால் படக்குழு இன்னும் சில வாரம் வெயிட் பண்ண முடிவு செய்துள்ளது.