சூர்யாவின் ‘நவம்பர்’ மேஜிக்... ‘கங்குவா’வுக்கும் கைகொடுக்குமா?
Actor Suriya November Release Movies : நடிகர் சூர்யாவின் கங்குவா படம் நவம்பர் மாதம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இதற்கு முன் அவர் நடிப்பில் அம்மாதம் ரிலீஸ் ஆன படங்கள் பற்றி பார்க்கலாம்.
Suriya Movies Released on November
நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். இப்படத்தை அக்டோபர் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டனர். ஆனால் அதே தேதியில் ரஜினியின் வேட்டையன் படமும் ரிலீஸ் ஆவதால் தற்போது அக்டோபர் மாதத்தில் இருந்து நவம்பர் மாதத்திற்கு கங்குவா படம் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. நவம்பர் 14-ந் தேதி அப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இதே நவம்பர் மாதத்தில் இதற்கு முன் சூர்யா நடித்த என்னென்ன படங்களெல்லாம் ரிலீஸ் ஆனது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நந்தா
நடிகர் சூர்யா நடித்து முதன்முதலில் நவம்பர் மாதம் ரிலீஸ் ஆன படம் நந்தா. இப்படத்தை இயக்குனர் பாலா இயக்கி இருந்தார். இப்படத்திற்கு முன்னர் வரை சூர்யாவின் நடிப்பை விமர்சித்த பலரும் இதில் சூர்யாவின் மிரள வைக்கும் நடிப்பை பார்த்து பிரம்மித்துப் போயினர். நந்தா திரைப்படம் கடந்த 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதி ரிலீஸ் ஆனது. இப்படம் நடிகர் சூர்யாவின் திரையுலக பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
Vel Movie
வேல்
நடிகர் சூர்யா - இயக்குனர் ஹரி கூட்டணி என்றாலே சக்சஸ்புல் கூட்டணி என்பது அனைவரும் அறிந்ததே. இவர்கள் இருவரும் இதுவரை இணைந்து ஆறு, வேல்,சிங்கம் 3 பாகம் என மொத்தம் 5 படங்களில் பணியாற்றி உள்ளனர். இந்த 5 படங்களுமே வேறலெவல் ஹிட் அடித்தது. இதில் சூர்யா கிராமத்து நாயகனாக நடித்து வெற்றிகண்ட படம் தான் வேல். இப்படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் 8ந் தேதி ரிலீஸ் ஆகி மாஸ் ஹிட் அடித்தது.
இதையும் படியுங்கள்... சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆகும் சூர்யாவின் கங்குவா - புது ரிலீஸ் தேதி இதோ
Vaaranam Aayiram
வாரணம் ஆயிரம்
சூர்யாவிற்கு மறக்க முடியாத பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் கெளதம் வாசுதேவ் மேனன். அவர் இயக்கத்தில் காக்க காக்க, வாரணம் ஆயிரம் போன்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ளார் சூர்யா. இதில் வாரணம் ஆயிரம் படம் தமிழ் சினிமாவில் ஒரு டிரெண்ட் செட்டிங் படமாக உள்ளது. அப்படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் சூர்யா. ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டானதை போல் அப்படமும் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 14-ந் தேதி ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
Soorarai pottru
சூரரைப் போற்று
நடிகர் சூர்யாவிற்கு முதல் தேசிய விருதை வென்று கொடுத்த படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கிய அப்படம் கடந்த 2020-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார் சூர்யா. அதுமட்டுமின்றி இப்படத்திற்கு மொத்தம் 6 தேசிய விருதுகள் கிடைத்தன. இப்படம் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 12ந் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
Jai Bhim
ஜெய் பீம்
சூர்யாவின் மற்றுமொரு மாஸ்டர் பீஸ் திரைப்படம் தான் ஜெய் பீம். இப்படத்தை த.செ.ஞானவேல் இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகர் சூர்யா பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞராக நடித்திருந்தார். இப்படம் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 2-ந் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. இப்படம் சமூகத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோடு பல்வேறு விருதுகளையும் வென்று குவித்தது.
இப்படி நவம்பர் மாதம் சூர்யா நடிப்பில் இதுவரை வெளியான ஒவ்வொரு படமும் மிகப்பெரிய வெற்றியை ருசித்திருக்கின்றன. அந்த மேஜிக் கங்குவா படத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படம் வருகிற 2024-ம் ஆண்டு நவம்பர் 14-ந் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... அதிதியிடம் கோடிக்கணக்கில் வரதட்சணை வாங்கினாரா சித்தார்த்? பயில்வான் கூறிய பகீர் தகவல்!