கோல்டன் குளோப் விருதுக்கு தேர்வாகி... உலக அளவில் கெத்து காட்டும் ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்கு தேர்வாகி உள்ளது.
பாகுபலி படங்களின் வெற்றிக்கு பின்னர் ராஜமவுலி இயக்கிய படம் தான் இரத்தம் ரணம் ரெளத்திரம். சுருக்கமாக ஆர்.ஆர்.ஆர் என அழைக்கப்படும் இப்படத்தில் நாயகர்களாக ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் நடித்திருந்தனர். இதில் ராம்சரண் சீதாராம ராஜுவாகவும், ஜூனியர் என்.டி.ஆர். கொமரம் பீம் ஆகவும் நடித்திருந்தனர். இரு சுதந்திர போராட்ட வீரர்களின் நட்பை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருந்தார் ராஜமவுலி.
இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், நடிகைகள் ஆலியா பட், ஷ்ரேயா சரண், நடிகர் சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் கடந்த மார்ச் மாதம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது.
இதையும் படியுங்கள்... நின்றுகொண்டே தண்ணீர் குடிச்சா உடலில் இத்தனை பிரச்சனைகள் ஏற்படுமா?- எச்சரிக்கும் ஆலியா பட்டின் பிட்னஸ் டிரைனர்
அனைத்து மொழிகளிலும் சக்கைப்போடு போட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி சமீபத்தில் ஜப்பானில் ரிலீசாகி அங்கும் ரூ.20 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி உள்ளது. இது ஒருபுறம் இருக்க இப்படத்திற்கு ஆஸ்கார் கிடைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் பேச்சு அடிபட்டு வருகிறது.
இந்நிலையில், ஆஸ்கருக்கு நிகரான உயரிய விருதான கோல்டன் குளோப் விருது வருகிற ஜனவரி மாதம் 10-ம் தேதி அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அதற்கு ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் சிறந்த படம் (ஆங்கிலம் அல்லாத) மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடல் (நாட்டு நாட்டு பாடல்) ஆகிய இரு பிரிவுகளில் தேர்வாகி உள்ளது. இதற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
இதையும் படியுங்கள்... திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமான மனைவி... அப்பா ஆகப்போகும் குஷியில் ஆர்.ஆர்.ஆர் நாயகன்