- Home
- Cinema
- எம்.ஜி.ஆர் குடும்பத்துடன் இவ்வளவு நெருக்கமா?! இத்தனை காலமாய் ரமேஷ் கண்ணா மறைத்த 'பிக்' சீக்ரெட்!
எம்.ஜி.ஆர் குடும்பத்துடன் இவ்வளவு நெருக்கமா?! இத்தனை காலமாய் ரமேஷ் கண்ணா மறைத்த 'பிக்' சீக்ரெட்!
நகைச்சுவை நடிகர் ரமேஷ் கண்ணா, முன்னாள் முதல்வர் ஜானகி அம்மாளின் நெருங்கிய உறவினர் என்ற ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஆச்சரியமூட்டும் குடும்பப் பின்னணி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

யாருக்கும் தெரியாத குடும்ப பின்னணி.!
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராகவும், கே.எஸ். ரவிக்குமாரின் வலதுகரமாக பல வெற்றிப் படங்களுக்கு திரைக்கதை எழுதிய இயக்குநராகவும் அறியப்படுபவர் ரமேஷ் கண்ணா. திரையில் இவரைப் பார்த்தாலே சிரிப்பு வரும் அளவுக்கு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துபவர். ஆனால், இவருக்குப் பின்னால் இவ்வளவு பெரிய அரச குடும்பப் பின்னணி இருக்கும் என்று யாருமே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
தற்போது அந்தப் பெரிய ரகசியத்தை ரமேஷ் கண்ணாவே உடைத்திருக்கிறார். அது வேறொன்றுமில்லை, தமிழகத்தின் சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜானகி அம்மாள் ஆகியோருக்கும் இவருக்குமான உறவுதான் அது!
ஜானகி அம்மாளின் நெருங்கிய உறவினரா ரமேஷ் கண்ணா?
உண்மையில் ரமேஷ் கண்ணாவின் தந்தை, வி.என். ஜானகி அவர்களின் சொந்தத் தாய்மாமா ஆவார். ஜானகி அம்மாள் திரையுலகில் ஒரு சூப்பர் ஸ்டார் ஹீரோயினாக உருவெடுத்ததற்குப் பின்னால் ரமேஷ் கண்ணாவின் தந்தை ஒரு முக்கிய கருவியாக இருந்துள்ளார்.
கும்பகோணத்தில் ஜானகி அம்மாள் இருந்தபோது, அவருக்கு நடிப்பு மற்றும் நடனத்தைக் கற்றுக்கொடுத்ததே தனது அப்பா தான் என்றும் அதன் பிறகுதான் 'ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி' படத்தின் மூலம் அத்தை மிகப்பெரிய உயரத்தைத் தொட்டார், எனவும் அந்தப் பழைய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் இயக்குனரும் நடிகருமான ரமேஷ் கண்ணா.
வறுமையிலும் கலங்காத தந்தை: எம்.ஜி.ஆரைத் தேடிப் போகாத ரகசியம்!
தமிழகமே எம்.ஜி.ஆரின் காலடியில் கிடந்தபோது, ரமேஷ் கண்ணாவின் தந்தை கடும் வறுமையில் வாடியிருக்கிறார். நினைத்திருந்தால் ஒரு போன் காலில் தன் கஷ்டங்களைத் தீர்த்திருக்க முடியும். ஆனால், அவர் என் மருமகன் என்ற கர்வத்தோடு இருந்தாரே தவிர, ஒருபோதும் உதவி கேட்டு எம்.ஜி.ஆரின் வீட்டு வாசலில் அவர் நின்றதே இல்லை.
கடைசி மூச்சு வரை தன் சுயமரியாதையைக் காத்து, எம்.ஜி.ஆரைச் சந்திக்காமலேயே அவர் மறைந்தது ஒரு வியக்கத்தக்க வரலாறு. தந்தையைப் போலவே ரமேஷ் கண்ணாவும், நான் எம்.ஜி.ஆரின் உறவினர் என்று எங்குமே அடையாளப்படுத்திக் கொள்ளாமல் தன் உழைப்பால் மட்டுமே முன்னேறியிருக்கிறார்.
திரையுலகில் ஒரு தீராத ஏக்கம்!
தான் ஒரு இயக்குநராகவும், நடிகராகவும் வெற்றியடைவதைப் பார்க்க ஜானகி அம்மாள் உயிரோடு இல்லையே என்பதுதான் தன் வாழ்நாளின் மிகப்பெரிய துரதிர்ஷ்டம் என்று வருந்துகிறார் ரமேஷ் கண்ணா. எனினும், இன்றும் எம்.ஜி.ஆர் - ஜானகி குடும்பத்தினரின் வீட்டு விசேஷங்கள் என்றால், முதல் ஆளாக ரமேஷ் கண்ணாவிற்கு அழைப்பு வந்துவிடுகிறதாம். அந்த அளவுக்கு இன்றும் அந்தப் பாசப்பிணைப்பு ரகசியமாகத் தொடர்ந்து வருகிறது.
என் முகம் காமெடியன் முகம் இல்லை என்று தனது சினிமா பயணம் குறித்துப் பேசிய அவர், நான் சீரியஸாகப் பேசினாலும் மக்கள் சிரிக்கிறார்கள். உண்மையில் என் முகம் ஒரு காமெடியனுக்கான முகம் கிடையாது. ஆனால் மக்கள் என் பேச்சையும் உடல் மொழியையும் ரசிக்கிறார்கள் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பெரிய இடத்துச் சம்பந்தம் இருந்தாலும், அதைத் துளியும் பயன்படுத்தாமல் சுயம்புவாக வளர்ந்த ரமேஷ் கண்ணாவின் இந்த ரகசியம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

