“ஓவர் ஆக்டிங்” என கிண்டல் செய்த சோவை தனியே அழைத்துச் சென்று சம்பவம் செய்த சிவாஜி
‘ஓவர் ஆக்டிங்’ என தன் நடிப்பை விமர்சித்த சோ ராமசாமிக்கு அதே நடிப்பால் பதிலடி கொடுத்த சிவாஜியின் செயல் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
சிவாஜி கணேசன் (Sivaji Ganesan)
தமிழ் திரையுலகம் தந்த ஒரு அற்புதக் கலைஞர் தான் சிவாஜி கணேசன். மேடை நாடகங்களில் தொடங்கி பின்னர் பல மொழிகளில் 300 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். 1952 ஆம் ஆண்டு தனது 25 வயதில் ‘பராசக்தி’ படத்தின் மூலமாக திரைத்துறைக்கு வந்த அவர் 1999 வரை அரை நூற்றாண்டுக்கு மேலாக தமிழ் சினிமா ரசிகர்களை தன் வசம் வைத்திருந்தார். சிறுவயதிலேயே வீட்டிலிருந்து வெளியேறி நாடக கம்பெனியில் இணைந்த சிவாஜி, பல நாடகங்களில் நடித்து வந்தார். அவர் நடித்த ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ நாடகத்தைப் பார்த்த தந்தை பெரியார் அவருக்கு ‘சிவாஜி கணேசன்’ என பெயர் சூட்டினார்.
சிவாஜி நடிப்பை விமர்சித்த பெரியார்
சிவாஜி மாபெரும் கலைஞராக இருந்த போதிலும் அவரது நடிப்புத் திறமை மற்றும் முகபாவனைகள் பலராலும் விமர்சிக்கப்பட்டு இருக்கிறது. இந்த காலத்தில் அவரது படங்களை பார்ப்பவர்கள் ‘ஓவர் ஆக்டிங்’ என விமர்சிப்பது வழக்கம். ஆனால் அவரை அந்த காலத்திலேயே ஓவர் ஆக்டிங் என பலரும் விமர்சித்துள்ளனர். இதுகுறித்து தனது சுயசரிதையில் சிவாஜி பல சம்பவங்களை கூறியுள்ளார். பெங்களூருவில் ‘விதி’ என்ற நாடகத்தை பார்ப்பதற்கு பெரியார் வந்திருந்தார். அதில் சிவாஜி வில்லனாக நடித்த கொண்டிருக்கிறார். சிவாஜியை நாயகி சுட்டு விடுகிறாள். ஆனால் சுட்டதும் உடனே விழாமல் ஆ..ஊ.. என்று சத்தம் போட்டு கத்தி, பல்டி அடித்து சிவாஜி கீழே விழுவார்.
ஓவர் ஆக்டிங் - சிவாஜி மீது சோ விமர்சனம்
இதைப் பார்த்த பெரியார் எழுந்து, “டேய் மடையா, அவள் தான் சுட்டு விட்டாளே? கீழே விழுந்து இறந்து போடா என்று சத்தம் போட்டு கூறியதாக சிவாஜி தனது சுயசரிதையில் நினைவு கூர்ந்துள்ளார். அதேபோல் படப்பிடிப்பு ஒன்றில் சிவாஜி நடித்த காட்சி படமாக்கப்பட்டிருந்தது. காட்சி முடிந்ததும் உடன் நடித்த நடிகர்கள் எல்லாம் சிவாஜியின் நடிப்பை புகழ்ந்து தள்ள, சோ மட்டும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அனைவரும் கலைந்து சென்ற பின்னர், சோவைப் பார்த்து, “ஏன்டா நீ மட்டும் எதுவும் சொல்லாமல் அமைதிய இருக்க?” என்று சிவாஜி கேட்டுள்ளார். அதற்கு சோ, “இன்று நீங்கள் நடித்த நடிப்பு ஓவர் ஆக்டிங். அவர்களெல்லாம் உங்களிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக இப்படி புகழ்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.
சிவாஜி தன்னைத் தாழ்த்திக் கொண்டு நடித்தார்
அதற்கு சிவாஜி எந்த சலனமும் இல்லாமல், அதே காட்சியை, எந்த முகபாவனையும் இல்லாமல், மெல்லிய குரலில், உடலில் அதீதமான அசைவுகள் இன்றி, எளிமையான முறையில் நடித்துக் காட்டினார். இதைப் பார்த்து வியந்துபோன சோ, இது நிஜமாகவே உலக தரத்தில் இருந்தது என்று சிவாஜியிடம் கூற, அதற்கு சிவாஜி, “இதுபோல நடிச்சா உன்ன போல நாலு பேர்தான் பாப்பாங்க. ஜனங்க பார்க்க மாட்டாங்க” என்று சொல்லி பதிலடி கொடுத்துள்ளார். இந்த நிகழ்வை குறிப்பிட்டுள்ள சோ, “சிவாஜிக்கு உலக நடிப்பும் தெரியும். உள்ளூர் நடிப்பும் தெரியும். ஆனால் மக்களின் ரசனைக்காக அவர் தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டார்” என குமுதம் இதழில் எழுதிய தொடரில் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் நடித்துக் கொடுத்த சிவாஜி
இயக்குனர் ஸ்ரீதர் சிவாஜியை வைத்து ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு காட்சி படமாக்கப்பட்டது. காட்சி முடிந்த பின்னர் உதவி இயக்குனர் பாஸ்கர் ஸ்ரீதரிடம் சென்று சிவாஜி ஓவர் ஆக்டிங் செய்து விட்டார். குறைத்து நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனக் கூறிக் கொண்டிருந்தார். அது தூரத்தில் இருந்த சிவாஜியின் காதில் விழுந்து விடுகிறது. பாஸ்கரின் அருகில் சென்ற சிவாஜி கோபப்படாமல், “பாஸ்கர் சொல்வது சரிதான். நடித்து முடித்த பின் எனக்கும் தோன்றியது. அந்த காட்சியை மீண்டும் எடுங்கள்” என்று இயக்குனருடன் கேட்டு மீண்டும் நடித்துக் கொடுத்துள்ளார்.
ஓவர் ஆக்டிங் குறித்து விளக்கிய சிவாஜி
அந்த காட்சி மீண்டும் படமாக்கப்பட்ட நிலையில் இந்த முறை கச்சிதமாக நடித்து முடித்தார் சிவாஜி. சிவாஜியிடம் தைரியமாக ஓவர் ஆக்டிங் என்ன என்று சொன்ன அந்த உதவி இயக்குனர் தான் பின்னாளில் ரஜினியை வைத்து ‘பைரவி’ திரைப்படத்தை இயக்கினார். அதன் பின்னர் ‘தீர்ப்புகள்’, ‘திருத்தப்படலாம்’, தண்டிக்கப்பட்ட நியாயங்கள்’, ‘சூலம்’ ஆகிய ‘படங்களையும் இயக்கினார். பிற்காலத்தில் சிவாஜியின் மிகையான நடிப்பு குறித்து பேட்டி ஒன்றில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “உயிரைக் கொடுத்து நடித்தால் ஓவர் ஆக்டிங் என்கிறார்கள். கொஞ்சம் சாதுவாக நடித்தால் இந்த படத்தில் சிவாஜி நடிக்கவே இல்லை என்கிறார்கள். இதற்கு முடிவே கிடையாது. மக்கள் எதை நம்மிடம் எதிர்பார்க்கிறார்களோ? அதுபோலத்தான் நடிக்க முடியும். அதுதான் எனக்குத் தெரியும்" என்றார்.
நடிப்பை உயிர்மூச்சாக கருதிய சிவாஜி
தற்போதைய கால இளைஞர்களுக்கு சிவாஜியின் நடிப்பு மிகையாகப்படலாம். ஆனால் நாடக மேடையில் இருந்து வளர்ந்து வந்த சிவாஜிக்கு நடிப்பு இயல்பாகவே இருந்தது. சிவாஜிக்கு நடிப்பு என்பது தொழில் அல்ல, வாழ்க்கை.