திரையுலகில் பேரதிர்ச்சி..! தாதா சாகேப் விருது பெற்ற பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் கே.விஸ்வநாத் காலமானார்!
பழம்பெரும் இயக்குனர் கே விஸ்வநாத், உடல்நல குறைவு காரணமாக தன்னுடைய 93 வயதில் காலமானார்.
தெலுங்கு திரையுலகில் எண்ணற்ற படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் கே. விஸ்வநாத். குறிப்பாக தமிழில் நடிகர் கமலஹாசன் நடித்த சலங்கை ஒலி, சிற்பிக்குள் முத்து, உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் கே.விஸ்வநாத். இவரின் இழப்பு ஒட்டு மொத்த திரையுலகையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
தெலுங்கில் 1965 ஆம் ஆண்டு, 'ஆத்ம கௌரவம்' என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கே.விஸ்வநாத். இவர் தன்னுடைய முதல் படத்துக்கே சிறந்த அறிமுக இயக்குனர், மற்றும் சிறந்த படத்திற்கான நந்தி விருதை பெற்றார். இடைத்தொடர்ந்து அடுத்தடுத்து பல தெலுங்கு முன்னணி நடிகர்களை இயக்கி சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். தெலுங்கு மொழி மட்டும் இன்றி, தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் சில படங்களை இயக்கியுள்ளார்.
திரையுலகில் மற்றொரு சோகம்..!பிரபல இயக்குநர் ஷண்முகப்ரியன் காலமானார்..!
படம் இயக்குவதை தாண்டி, சில தமிழ் படங்களிலும் நடித்து, சிறந்த நடிகர் என்பதை தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் நிரூபித்தவர் கே.விஸ்வநாத். அந்த வகையில் நடிகர் கமலஹாசன் நடித்த 'குருதி புனல்', அஜித்துடன் 'முகவரி', பார்த்திபன் நடித்த 'காக்கைச் சிறகுகளே', விஜய் நடித்த 'பகவதி' நயன்தாரா மற்றும் தனுஷ் நடித்த 'யாரடி நீ மோகினி' போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.தமிழில் கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான, 'சொல்லி விடவா' என்கிற படத்திலும் நடித்திருந்தார். மேலும் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
திரைப்பட இயக்கம், நடிப்பை தாண்டி, ஆடியோ கிராபர், ஸ்க்ரீன் பிளே ரைட்டர், என பன்முக திறமையோடு விளங்கியவர் கே.விஸ்வநாத். மேலும் பத்மஸ்ரீ விருது, தாதா சாகேப் பால்கி விருது, தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். எட்டு முறை நந்தி விருது, ஆறு முறை தேசிய விருது, ஒன்பது முறை ஃபிலிம் பேர் விருதை பெற்றுள்ளார்.
சகுந்தலம் படத்திற்காக 30 கிலோ புடவை... 3 கோடி நகைகளை அணிந்து நடித்தாரா சமந்தா? ஆச்சர்ய புகைப்படம்!
இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பு மற்றும் உடல்நல பிரச்சனையால் அவதிப்பட்டுவந்த இவர், தன்னுடைய 93 வயதில் சற்று முன்னர் ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து திரை உலகை சேர்ந்த பலர் சமூக வலைத்தளம் மூலம் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். பல பிரபங்கள் இவரின் இழப்பு திரையுலகில் ஈடு செய்யமுடியாத இழப்பு என கூறிவருகிறார்கள்.