முதன்முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய தமிழ் ஹீரோ ராஜ்கிரண் தான்... அதுவும் எந்த படத்துக்காக தெரியுமா?
தமிழ் சினிமாவில் முதன்முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய ஹீரோ என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் நான் தான் என்பதை நடிகர் ராஜ்கிரண் சமீபத்திய பேட்டி மூலம் உறுதி செய்துள்ளார்.
தமிழ் திரையுலகில் தற்போது உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோர் ஒரு படத்துக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர். இவர்களெல்லாம் 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருக்கின்றனர். இருப்பினும் இவர்களையெல்லாம் மிஞ்சும் வகையில், தமிழ் சினிமாவில் முதன்முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய ஹீரோ என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ராஜ்கிரண் தான் என கூறப்பட்டு வந்தது. இதனை சமீபத்திய பேட்டியில் அவரே உறுதி செய்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது : “எனக்கு ஒரு கோடி சம்பளம் தருவதாக சொன்னது எனக்கு பெரிதாக தெரியவில்லை. ஏனெனில், நான் 16 வயசுல சென்னைக்கு வந்து முதன்முதலில் வாங்கிய சம்பளம் 4 ரூபாய் 50 பைசா. அப்போது நான் தினக்கூலியாக இருந்தேன். இதையடுத்து என்னுடைய உழைப்பையும், நேர்மையையும் பார்த்து நான் வேலை பார்த்த கம்பெனியிலேயே கிளர்க்காக பதவி உயர்வு கொடுத்தாங்க. அப்போது மாதம் 150 ரூபாய் சம்பளம். பின்னர் அதை 170 ரூபாயாக உயர்த்தி கொடுத்தார். அந்த ஒரு கம்பெனியில் தான் நான் வேலை பார்த்தேன்.
இதையும் படியுங்கள்... மொழி கடந்து தொடரும் வசூல் வேட்டை... அஜித், சூர்யா பட சாதனைகளை அசால்டாக தட்டித்தூக்கி கெத்து காட்டும் லவ் டுடே
இதையடுத்து சொந்தமாக விநியோக கம்பெனி ஆரம்பித்து படிப்படியாக சினிமாவில் வளர்ந்தேன். அதன்பின் நானே படம் இயக்கி நடித்தேன். அதெல்லாம் பெரிய அளவில் ஹிட் ஆகின. அதையடுத்து என்னை வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்காக நடிக்க அழைத்தபோது 1 கோடியே பத்து லட்சம் ரூபாய் சம்பளமாக தருவதாக சொன்னார்கள். இதை என் உழைப்புக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக தான் பார்த்தேன். 4 ரூபாய் 50 பைசா சம்பளம் வாங்கும்போது என்ன உணர்வு இருந்ததோ அதே தான் ஒரு கோடி சம்பளம் வாங்கும் போதும் இருந்தது” என கூறினார்.
அந்த பேட்டியில் அவர் எந்த படத்துக்காக 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினேன் என தெரிவிக்கவில்லை. ஆனால் நமக்கு கிடைத்த தகவலின் படி அவர் கடந்த 1996-ம் ஆண்டு கே.வி.பாண்டியன் இயக்கத்தில் நடித்த மாணிக்கம் என்கிற படத்துக்காக தான் முதன்முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கினாராம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடித்திருந்தார். இப்படத்தை அம்மா கிரியேசன்ஸ் சார்பாக டி.சிவா தயாரித்து இருந்தார். இப்படத்தின் மூலம் தான் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய தமிழ் ஹீரோ என்கிற அந்தஸ்தை பெற்றுள்ளார் ராஜ்கிரண். இவருக்கு பின்னர் தான் ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோர் அந்த உயரத்தை எட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... அஜித் உடன் எடுத்த ரொமாண்டிக் போட்டோ உடன் இன்ஸ்டாகிராமில் எண்ட்ரி கொடுத்த ஷாலினி - அதற்குள் இத்தனை பாலோவர்களா.!