- Home
- Cinema
- சோகத்தில் இருக்கும் ரஜினிக்கு ஆறுதல் அளித்த அண்ணாத்த... விஜய், சூர்யாவை தட்டி தூக்கி TRPல் முதலிடம் பிடித்தார்
சோகத்தில் இருக்கும் ரஜினிக்கு ஆறுதல் அளித்த அண்ணாத்த... விஜய், சூர்யாவை தட்டி தூக்கி TRPல் முதலிடம் பிடித்தார்
பொங்கல் பண்டிகைக்கு அண்ணாத்த திரைப்படம் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. தற்போது அதன் டி.ஆர்.பி ரேட்டிங் விவரம் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கியிருந்த இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
கடந்தாண்டு தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலை வாரிக்குவித்தது. பாக்ஸ் ஆபிஸில் சுமார் 200 கோடி ரூபாய் மேல் வசூலித்தது. குடும்ப செண்டிமெண்ட் அதிகமாக இருந்ததால் இப்படத்திற்கு ஃபேமிலி ஆடியன்ஸிடம் அமோக வரவேற்பு கிடைத்தது.
இப்படத்தின் 50-வது நாள் விழாவை நடிகர் ரஜினி, தனது வீட்டிலேயே கொண்டாடி மகிழ்ந்தார். அப்போது படக்குழுவினருக்கு தங்க செயின் பரிசாக அளித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொங்கல் பண்டிகைக்கு அண்ணாத்த திரைப்படம் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. தற்போது அதன் டி.ஆர்.பி ரேட்டிங் விவரம் வெளியாகி உள்ளது.
அதன்படி 17.37 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அண்ணாத்த படம் சாதனை படைத்துள்ளது. கடந்தாண்டு வெளியான படங்களில் அதிக டி.ஆர்.பி ரேட்டிங் பெற்ற படம் அண்ணாத்த தான். பொங்கல் சமயத்தில் சூர்யாவின் ஜெய் பீம், விஜய்யின் மாஸ்டர் போன்ற படங்களும் டிவி-யில் ஒளிபரப்பப்பட்டன. ஆனால் அவைகளால் அண்ணாத்த ரேட்டிங்கை முந்தமுடியவில்லை.
ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும், தனுஷும் விவாகரத்து செய்து பிரிவதாக அண்மையில் அறிவித்தனர். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த ரஜினிக்கு, அண்ணாத்த சாதனை ஆறுதல் தரும் விஷயமாக அமைந்தது. இருப்பினும் தொலைக்காட்சியில் இதுவரை ஒளிபரப்பப்பட்ட படங்களில் அதிக ரேட்டிங் பெற்ற படமாக அஜித்தின் விஸ்வாசம் உள்ளது. இரண்டாம் இடத்தில் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரனும், மூன்றாவது இடத்தில் அண்ணாத்த படமும் உள்ளது.