விஜயகாந்த் செய்த அந்த 2 உதவிகளை என்னால் என்றென்றும் மறக்க முடியாது... நண்பனை பற்றி ரஜினி பகிர்ந்த மெமரீஸ்
விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கேப்டன் தனக்கு செய்த 2 மறக்க முடியாத உதவிகள் பற்றி மனம் திறந்து பேசி உள்ளார்.
கேப்டன் விஜயகாந்தின் மறைவால் தமிழ் திரையுலகமே சோகத்தில் மூழ்கி உள்ளது. சினிமாவுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் அவர் செய்த உதவிகள் ஏராளம். அந்த நல்ல மனசுக்காக தான் இன்று ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே திரண்டு வந்து விஜயகாந்துக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகிறது. அதோடு தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ரசிகர்களும் வழிநெடுக காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த இன்று காலை தூத்துக்குடியில் இருந்து கிளம்பி வந்தார். தூத்துக்குடியில் நடைபெற்று வரும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அவர், தன் நண்பனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு கிளம்பி வந்தார். விஜயகாந்த் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திவிட்டு அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய ரஜினி, விஜயகாந்தை பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
அதன்படி அவர் கூறியதாவது : “எனக்கு உடல்நிலை சரியில்லாமல், ராமச்சந்திரா மருத்துவமனையில் நான் சுயநினைவு இல்லாமல் இருந்தேன். அப்போது மருத்துவமனை முன் மீடியா, மக்கள், ரசிகர்கள் எல்லாரும் திரண்டதால் ரொம்ப தொந்தரவாக இருந்தது. அப்போ கூட்டத்தை கண்ட்ரோல் பண்ண முடியல. அப்போ அங்கு வந்த விஜயகாந்த், என்ன பண்ணாருனு தெரியல, 5 நிமிஷத்துல எல்லாரையும் கிளியர் பண்ணினார். அதுக்கப்புறம் என் வீட்ல என் ரூம் அருகிலேயே ரூம் போட்டு கொடுங்க, அங்க யார் வர்றாங்கனு நான் பாக்குறேன்னு தைரியமா சொன்னார். அந்த உதவிய என்னால் மறக்கவே முடியாது.
அதேமாதிரி, ஒரு முறை நடிகர் சங்கம் நடத்தும் கலை நிகழ்ச்சிக்காக சிங்கப்பூர், மலேசியாவுக்கு சென்றபோது, மலேசியாவில் நிகழ்ச்சி முடிந்து எல்லாரும் பஸ்ல ஏறீட்டாங்க. நான் வரும்போது ரசிகர்கள் சூழ்ந்துட்டாங்க. நானும் கூட்டத்துல சிக்கி என்னால வரவே முடியல, 5 நிமிஷமா திண்டாடினேன். அங்க இருந்த பவுன்சர்களாலும் ஒன்னும் செய்ய முடியவில்லை. இதையெல்லாம் பஸ்ல இருந்து பார்த்துக் கொண்டிருந்த விஜயகாந்த், துண்ட எடுத்துட்டு இறங்கி வந்தாரு. ஒரு ரெண்டு நிமிஷத்துல எல்லாரையும் அடிச்சு விரட்டி, என்னை பூமாதிரி கொண்டுவந்து பஸ்ல உட்கார வச்சாரு. உங்களுக்கு ஒன்னும் இல்லையே என வந்து கேட்டார். அந்த மாதிரி இருந்த ஒரு ஆளு அவரு. அவரை கடைசி நாட்கள்ல பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு” எனக்கூறி கலங்கினார் ரஜினிகாந்த்.
இதையும் படியுங்கள்... விஜயகாந்தின் கோபத்தில் நியாயம் இருக்கும்; சுயநலம் இருக்காது - ரஜினிகாந்த் நெகிழ்ச்சி