இமயமலை பயணம் முடிந்தவுடன் வீட்டுக்கு வராமல்... நேராக ஆளுநர் மாளிகைக்கு சென்ற ரஜினி - என்ன விஷயம்?
ஒரு வார ஆன்மீக பயணமாக இமயமலைக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த், நேராக ராஜ் பவனுக்கு சென்று ஆளுநரை சந்தித்து உள்ளார்.
கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். 72 வயதிலும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுத்து வரும் ரஜினி, சமீபத்தில் வெளியான ஜெயிலர் படம் மூலம் தரமான கம்பேக் கொடுத்துள்ளார். ஜெயிலர் படத்தின் ரிலீசுக்கு முன்பே இமயமலைக்கு புறப்பட்டு சென்ற ரஜினிகாந்த், அங்கு ஒரு வார காலம் தங்கி இருந்து பல்வேறு ஆன்மீக தலங்களுக்கு சென்று வழிபட்டார். ரஜினிகாந்தின் இமயமலை பயணம் நேற்றுடன் முடிவடைந்தது.
இமயமலை பயணத்தை முடித்தவுடன் ரஜினிகாந்த், சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்றுவிட்டார். அங்கு ஆளுநராக பதவி வகித்து வரும் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் தமிழக பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்துள்ளார். ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இதையும் படியுங்கள்... கோடிகளை குவிக்கும் ஜெயிலர்.. நெல்சனுக்காக பிரம்மாண்ட பரிசுடன் காத்திருக்கும் கலாநிதி மாறன்- அது என்ன தெரியுமா?
ரஜினியுடனான சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், இதுகுறித்து கூறியுள்ளதாவது : “என்னுடைய நெருங்கிய நண்பர், இந்தியாவின் தலைசிறந்த நடிகர், சிறந்த மனிதர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக நேற்று ராஜ்பவனில் சந்தித்தேன். ஜார்க்கண்ட்டிற்கு அவரை மனதார வரவேற்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.
சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த பிப்ரவரி மாதம் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார். அம்மாநிலத்தின் 11-வது ஆளுநர் இவர் ஆவார். தமிழக பாஜகவின் தலைவராகவும் இவர் பணியாற்றி இருக்கிறார். அதேபோல் 2 முறை எம்.பி.யாக பதவி வகித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் என்பதால் அவரை சூப்பர்ஸ்டார் நேரில் சந்தித்து பேசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... திரையில் பிரம்மாண்டம்... நிஜத்தில் எளிமை! ‘ஜென்டில்மேன்’ இயக்குனர் ஷங்கரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?