திரையில் பிரம்மாண்டம்... நிஜத்தில் எளிமை! ‘ஜென்டில்மேன்’ இயக்குனர் ஷங்கரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இன்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு மற்றும் கார் கலெக்ஷன் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பிரம்மாண்டம் என்றாலே ஷங்கர் தான் என சொல்லும் அளவுக்கு தன்னுடைய பிரம்மாண்ட படைப்புகளால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து இருப்பவர் ஷங்கர். டிப்ளமோ படத்து முடித்த ஷங்கர், சினிமா மீதுள்ள ஆர்வத்தால் முதலில் ஒரு சில படங்களில் நடித்தார். பின்னர் ஷங்கர் அவரது குழுவினரோடு சேர்ந்து போட்ட டிராமா ஒன்றை பார்த்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷங்கரை தன்னுடைய படங்களில் பணியாற்ற அழைத்தார். இதையடுத்து எஸ்.ஏ.சி.யிடம் ஜெய் ஷிவ் ஷங்கர், நண்பர்கள் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஷங்கர், 1993-ம் ஆண்டு இயக்குனராக அவதாரம் எடுத்தார்.
அவர் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் ஜென்டில்மேன், அர்ஜுன், மதுபாலா நடிப்பில் வெளிவந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. முதல் படத்திலேயே பிரம்மாண்ட வெற்றியை ருசித்த ஷங்கருக்கு அடுத்ததாக பிரபுதேவாவை வைத்து காதலன் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படத்திலும் தன்னுடைய கற்பனையால் பிரம்மாண்டத்தை புகுத்தி வெற்றிகண்டார் ஷங்கர்.
இதையடுத்து ஷங்கருக்கு கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு தான் கமல்ஹாசனின் இந்தியன் திரைப்படம். 1996-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் அந்த சமயத்தில் இண்டஸ்ரி ஹிட் படமாக அமைந்தது. பின்னர் முதல்வர், பாய்ஸ், அந்நியன் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த ஷங்கருக்கு சூப்பர்ஸ்டார் உடன் முதன்முறையாக இணையும் வாய்ப்பு சிவாஜி படம் மூலம் நிறைவேறியது. பிரம்மாண்டமான பாடல் காட்சிகள், ரஜினியின் ஸ்டைல் என சிவாஜி படத்தை செதுக்கி இருந்த ஷங்கர் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தார். இதையடுத்து ரஜினியுடன் எந்திரன், 2.0 என ஹாட்ரிக் ஹிட்டும் கொடுத்து அசத்திவிட்டார் ஷங்கர்.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இப்படி திரையுலகில் 30 ஆண்டுகளாக தன்னுடைய பிரம்மாண்ட படைப்புகளால் கோலோச்சிய ஷங்கர் இன்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி தற்போது பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... பயத்துடன் சென்ற எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் ரஜினி; ஜெயிலர் பட அனுபவங்களை பகிர்ந்த சீனு - Exclusive பேட்டி
திரையில் பிரம்மாண்டங்களை புகுத்தி பிரம்மிப்பை ஏற்படுத்தும் இயக்குனர் ஷங்கர் நிஜத்தில் மிகவும் எளிமையான மனிதர் தானாம். சிம்பிளான வாழ்க்கையை விரும்பும் இயக்குனர் ஷங்கர் தான் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனரும் கூட. இந்தியன் 2 படத்திற்காக இயக்குனர் ஷங்கருக்கு ரூ.50 கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. காஸ்ட்லி இயக்குனரான ஷங்கரின் சொத்து மதிப்பு ரூ.150 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். முதல்வன் படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான ஷங்கர், காதல், இம்சை அரசன் 23-ம் புலிகேசி, வெயில், கல்லூரி, அறை எண் 305-ல் கடவுள், ஈரம், அனந்தபுரத்து வீடு என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தன்னுடைய் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வெற்றியும் கண்டார். தயாரிப்பு நிறுவனம் மூலமும் ஷங்கருக்கு கோடிக்கணக்கில் வருமானம் வருகிறதாம்.
சென்னை மற்றும் மும்பையில் ஷங்கருக்கு சொகுசு பங்களா உள்ளது. இதில் நவி மும்பையில் உள்ள ஷங்கரின் பிரம்மாண்ட வீடு மட்டும் ரூ.6 கோடி இருக்குமாம். இதுதவிர ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்துள்ளார் ஷங்கர். இவரிடம் விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் உள்ளது. அதன் மதிப்பு ரூ.3.65 கோடியாம். இந்த காருக்கு ஸ்பெஷல் நம்பர் பிளேட் வாங்கவே பல லட்சம் செலவளித்துள்ளாராம் ஷங்கர். இதுதவிர பிஎம்டபிள்யூ காரும் அவரிடம் உள்ளது.
இதையும் படியுங்கள்... ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்பு நிறைவேறியது.. மீண்டும் இணையும் அண்ணன் தம்பி.. தனி ஒருவன் 2 லோடிங்!