காலா ரிட்டர்ன்ஸ்... 12 ஆண்டுகளுக்கு பின் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் கிரிக்கெட் பார்க்க கெத்தாக வந்த ரஜினி
2011-ம் ஆண்டு இந்தியா உலக கோப்பை ஜெயித்தபோது மும்பை வான்கடே ஸ்டேடியம் வந்த ரஜினி இதையடுத்து 12 ஆண்டுகளுக்கு பின் தற்போது தான் அங்கு சென்றுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி. 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் போட்டிகள் முதலில் முடிவடைந்து விட்டன. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றியை சந்தித்த இந்தியா, 3-வது டெஸ்ட்டில் தோல்வி அடைந்தது. இதையடுத்து அகமதாபாத்தில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியை டிரா செய்து 2-1 என்கிற கணக்கில் டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதன் மூலம் வருகிற ஜூன் மாதம் லண்டனில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்று உள்ளது. அதில் ஆஸ்திரேலியா உடன் தான் இந்தியா மோத உள்ளது. கடந்தமுறை இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவிய இந்தியா, இந்த முறை வெற்றிபெற்று உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை தட்டித்தூக்கும் முனைப்போடு உள்ளது.
இதையும் படியுங்கள்... உலக பணக்கார கிரிக்கெட்டர்கள் பட்டியலில் சச்சின், கோலி, தோனியை முந்திய முன்னாள் ஆஸி., வீரர் யார் தெரியுமா?
ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் தொடர் முடிந்ததை அடுத்து, இன்று ஒருநாள் தொடர் தொடங்கி உள்ளது. இப்போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியே பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளார். இதையடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது.
இந்நிலையில், இந்த போட்டியை காண நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்திற்கு வந்துள்ளார். அவரது மனைவி லதாவும் உடன் சென்று இருந்தார். ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளித்த மும்பை கிரிக்கெட் அசோசியேசன் தலைவர் அமோல் கலே, அவருடன் சேர்ந்து போட்டியையும் கண்டுகளித்தார். ரஜினிகாந்த் வான்கடே மைதானத்தில் அமர்ந்து கிரிக்கெட்டை கண்டுகளிக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதற்கு முன் கடந்த 2011-ம் ஆண்டு இந்தியா உலக கோப்பை ஜெயித்தபோது மும்பை வான்கடே ஸ்டேடியம் வந்த ரஜினி இதையடுத்து 12 ஆண்டுகளுக்கு பின் தற்போது தான் அங்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஏ.ஆர் ரஹ்மானுக்காக ரயில் நேரத்தை மாற்றிய மெட்ரோ ரயில் நிர்வாகம்..? எதற்காக தெரியுமா.?