ரஜினி தான் என் வாழ்க்கை... விரக்தியில் உயிரை விட்ட ரசிகர்... நடுத்தெருவில் தவிக்கும் குடும்பம்...!
உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார் என லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இதோ... அதோ... என கூறிக்கொண்டிருந்த ரஜினிகாந்த் டிசம்பர் 31ம் தேதி அதாவது இன்று தனது அரசியல் கட்சி தொடங்கும் நாள் குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்திருந்தார். அதற்கு முன்னதாகவே அவருடைய ரசிகர்கள் வீடு வீடாக சென்று ரஜினிக்காக வாக்கு சேகரித்து வந்தனர்.
இந்நிலையில் ஐதராபாத்தில் நடைபெற்று வந்த அண்ணாத்த படப்பிடிப்பின் போது 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டது.
அதன் பின்னர் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ரஜினிகாந்த் ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 3 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில், கொரோனா தொற்றை ஏற்படுத்தும் சூழ்நிலைகளை தவிர்க்கவும், மன உளைச்சலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்ற மருத்துவர்களின் அறிவுரையுடன் டிஸ்சார்ஜ் ஆனார்.
உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியது. அதை உறுதி செய்வது போல் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ரஜினி, கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட போவதில்லை என்றும், என்னால் முடிந்தவற்றை மக்களுக்கு செய்வேன் என்றும் அறிவித்தார்.
ரஜினியின் இந்த அறிவிப்பை ஏற்க முடியாமல் இன்று வரை தினமும் ஏராளமான ரசிகர்கள் போயஸ் கார்டன் முன்பு குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் சின்ன வயதில் இருந்தே சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகராக இருந்தவர் ராஜ்குமார் (34). விழுப்புரம் அருகேயுள்ள பாணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், விவசாய கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்ட பின் ராஜ்குமார் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக அவருடைய முகநூல் பக்கத்தில் ரஜினி தான் என் வாழ்க்கை... இதுவே என் கடைசி பதிவு என பதிவிட்டுள்ளார்.
நண்பர்களிடம் ரஜினி கட்சி ஆரம்பிக்காதது பற்றியே புலம்பி வந்த ராஜ்குமார் நேற்று முன்தினம் உறக்கச் சென்றுள்ளார். காலையில் படுக்கையில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து ராஜ்குமாரின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் தற்கொலையா? மன அழுத்தத்தில் உயிரிழந்தாரா? என விசாரித்து வருகின்றனர்.