சிங்கிள் பட லாபத்தை இந்திய ராணுவத்துக்கு வழங்குவேன் - தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் அதிரடி
நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையும், தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த், தன் பட லாபத்தை இந்திய ராணுவத்துக்கு வழங்குவதாக அறிவித்து உள்ளார்.

Allu Aravind Announces Donation to Indian Army
ஏப்ரல் 22ந் தேதி அன்று ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமடைந்துள்ளது. 26 பொதுமக்களைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 அன்று இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர்
பயங்கரவாதிகளை மட்டும் குறிவைத்து இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானை கோபமடையச் செய்தது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய இடங்களில் உள்ள பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்களை இந்திய பாதுகாப்பு அமைப்புகள் திறம்பட முறியடித்தன. இதையடுத்து இந்தியா நடத்திய பதிலடித் தாக்குதலில் பாகிஸ்தானின் முக்கிய விமான தளங்கள் உட்பட பல இடங்கள் சேதமடைந்தன. மே 9 அன்றும் பாகிஸ்தானின் தரப்பில் இருந்து இதேபோன்ற தாக்குதல் நடத்தப்பட்டது, இந்தியா பதிலடி கொடுத்தது.
தேசிய பாதுகாப்பு நிதி
இதனால், எல்லைப் பகுதிகளில் பதற்றம் அதிகரித்ததை அடுத்து, சனிக்கிழமையன்று இந்தியாவும் பாகிஸ்தானும் அவசர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதை முதலில் அறிவித்தார். இந்த நிலையில், தேசிய பாதுகாப்பு நிதிக்காக பல்வேறு பிரபலங்கள் நிதிகளை வாரி வழங்கிய வண்ணம் உள்ளனர். நேற்று இளையராஜா தன்னுடைய ஒரு மாத சம்பளம் மற்றும் தன்னுடைய இசை நிகழ்ச்சி மூலம் கிடைத்த தொகையை தேசிய பாதுகாப்பு நிதிக்காக வழங்கினார்.
படத்தின் லாபத்தை ராணுவத்திற்கு வழங்கும் அல்லு அரவிந்த்
இந்நிலையில், தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் அல்லு அரவிந்த், தற்போது தனது தயாரிப்பில் வெளியாக உள்ள சிங்கிள் திரைப்படத்தின் லாபத்தில் இருந்து ஒரு பங்கை இந்திய ராணுவத்திற்காக வழங்குவேன் என்று அறிவித்துள்ளார். அல்லு அர்ஜுன் தந்தையின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. சிங்கிள் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பை அல்லு அரவிந்த் வெளியிட்டார்.