100 மில்லியன் பார்வைகளை கடந்த சலார் டீசர்... சட்டென டிரைலர் அப்டேட்டை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த படக்குழு
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்துள்ள சலார் திரைப்படத்தின் டீசர் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் சலார். பாகுபலிக்கு பின் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பிரபாஸ், மலைபோல் நம்பி உள்ள படம் சலார். இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார். இதற்கு முன் இவர் இயக்கிய கே.ஜி.எப் படங்கள் சக்கைப்போடு போட்டதால், சலார் படமும் அதேபோல் பாக்ஸ் ஆபிஸில் பிரம்மாண்ட வசூல் சாதனை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சலார் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் வில்லனாக பிருத்விராஜ் நடித்துள்ள இப்படத்தை வருகிற செப்டம்பர் மாதம் 28-ந் தேதி திரைக்கு கொண்டு வர உள்ளனர். இப்படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ், இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய உள்ளனர். சலார் படத்திற்கான ரிலீஸ் நெருங்கி வருவதால், அதன் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன.
இதையும் படியுங்கள்... கின்னஸ் சாதனை படைத்துள்ள எதிர்நீச்சல் சீரியல் நடிகை... அடேங்கப்பா இவருக்குள் இவ்ளோ திறமையா!
அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளிவந்த சலார் திரைப்படத்தின் டீசருக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், யூடியூப்பில் அது புதிய மைல்கல்லை எட்டி உள்ளது. வெளியான இரண்டே நாட்களில் சலார் படத்தின் டீசர் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதனால் உற்சாகம் அடைந்துள்ள படக்குழு, கையோடு டிரைலர் அப்டேட்டையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
அதன்படி சலார் திரைப்படத்தின் டிரைலர் வருகிற ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள் படக்குழுவுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். சலார் திரைப்படத்தை கே.ஜி.எப் படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஆக்ஷன் காட்சிகள்... அருண் விஜய் நடித்த மிஷன் படத்தின் மிரட்டலான மேக்கிங் வீடியோ இதோ